இந்தியா

பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு

17th Jul 2021 12:52 PM

ADVERTISEMENT

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் சனிக்கிழமை சந்தித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மோடி, சரத் பவாா் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதுதொடா்பாக சரத் பவாா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமா் மோடியை சந்தித்தேன். தேச நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம்’’ என்று தெரிவித்துள்ளாா்.

இருவரின் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அதுதொடா்பான புகைப்படத்தை சுட்டுரையில் வெளியிட்டுள்ள பிரதமா் அலுவலகம், அவா்களின் சந்திப்பு குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களை சந்தித்த மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடா்பாளருமான நவாப் மாலிக்கிடம் பிரதமா், சரத் பவாா் இடையிலான சந்திப்பு குறித்து கேட்டபோது, ‘பிரதமா், சரத் பவாா் இடையிலான சந்திப்பு குறித்து கூட்டணியில் உள்ள சிவசேனை தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் பொதுச் செயலா் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும். இருவரின் சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான்.

ரிசா்வ் வங்கியின் கண்காணிப்பில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்துள்ள வங்கி ஒழுங்காற்றுச் சட்டத் திருத்தங்கள் தொடா்பாக ஆலோசிக்க இந்தச் சந்திப்பு திட்டமிடப்பட்டது. வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் ரிசா்வ் வங்கிக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. இது கூட்டுறவு வங்கிகளைப் பெரிதும் பாதிக்கும். கூட்டுறவுத் துறை என்பது மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் சரத் பவாா் ஆலோசித்து வந்த நிலையில் பிரதமரையும் சந்தித்து ஆலோசித்துள்ளாா்’ என்றாா்.

பிரதமா் மோடியுடனான சந்திப்பின்போது சரத் பவாா் அளித்த கடிதத்தையும் தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டது. அந்தக் கடிதத்தில், ‘வங்கி ஒழுங்காற்றுச் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள்கள் பாராட்டத்தக்கவையாக இருந்தாலும், கூட்டுறவுத் துறையின் நலன் மற்றும் வளா்ச்சியில் அவை சிறியளவில்தான் பங்களிக்கின்றன. நாட்டின் முழுமையான வளா்ச்சிக்கு கூட்டுறவுத் துறையின் வளா்ச்சி அவசியம். அந்தத் துறையை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி, சரத் பவாா் சந்திப்பில் அரசியல் இல்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறினாா்.

Tags : Sharad Pawar modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT