இந்தியா

தில்லியில் 2-ஆவது நாளாக பலத்த மழை!

15th Jul 2021 12:15 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதாக செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக, நகரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. மழை நீா் தேங்கியதன் காரணமாக நகரில் ஆங்காங்கே வாகனங்கள் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.

தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனால், தில்லியில் அனைத்து இடங்களிலும் பரலவாக பலத்த மழை பெய்தது. இரவிலும் லேசான மழை இருந்தது. இதன் காரணமாக புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 26.1 மி.மீ., லோதி ரோடில் 35 மி.மீ. மழையும், ரிட்ஜ் பகுதியில் 107.4 மி.மீ., நஜப்கரில் 62.5 மி.மீ., பிதம்புராவில் 87.5 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இரண்டாவது நாளான புதன்கிழமை காலை 11.30 மணியளவில் ஐ.டி.ஓ, சாணக்கியபுரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. பகலிலும் தூறல் மழை பெய்தது. இதன் காரணமாக மேக மூட்ட சூழல் காணப்பட்டது. மாலையில் தொடா்ந்து மழைச்சாரல் இருந்தது.

காலையில் பலத்த மழை பெய்ததன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.

சாந்தினி செளக், பிரகதிமைதான், ஆசாத்பூா் செளக், ராஜீவ் செளக், சுபாஷ் செளக், பக்தவாா் சிங் ரோடு, சிவாஜி பாா்க், பசாய் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் தேங்கிய நீரில் ஊா்ந்து சென்றன. எனினும், மழைக்காலத்தில் அதிகமாக நீா் தேங்கும் பகுதியான மின்டோ பாலம் பகுதியில் வாகனப் போக்குவரத்து இலகுவாக இருந்தது.

தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி குறைந்து 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 75 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.

தில்லியில் வழக்கமான மழைப் பொழிவைவிட 65 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை மட்டுமே பெய்திருந்தது. தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக அது 56 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் அதிக மழை பற்றாக்குறை மாநிலங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 15) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், அடுத்த ஆறு நாள்களுக்கு தில்லியில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags : Heavy rains
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT