இந்தியா

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்கும் இந்திய நிறுவனம்

13th Jul 2021 04:35 PM

ADVERTISEMENT

ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவின் சீரம் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி தயாரிக்கும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதால் அதனை தீர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் ஓராண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்பத்தை பரிமாறி கொள்ளும் முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அதன் ஒரு அங்கமாக, செல் மற்றும் வெக்டர் மாதிரிகளை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தடுப்பூசியை தயாரிப்பதற்காக ரஷிய நேரடி முதலீட்டு நிதி நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என கூறியுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா, அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT