இந்தியா

மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: தமிழக அமைச்சரிடம் மத்திய அரசு உறுதி

7th Jul 2021 03:26 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
 மேலும், மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணை விவகாரத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடுவர் மன்றம் அமைக்கவும் மத்திய அரசு சம்மதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 புது தில்லி வந்துள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை செவ்வாய்க்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
 மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடனான சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் இருந்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு நதிநீர் பிரச்னைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்பட 8 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தேன்.
 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஜூன், ஜூலை மாதங்களில் நிலுவையில் இருக்கும் காவிரி நீரை பிலிகுண்டுலுவில் சரியான நேரத்தில் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உரிய ஆலோசனைகளை மத்திய அரசு வழங்க வலியுறுத்தினோம். தமிழகத்துக்கு தற்போது வரை 5.67 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகளில் காவிரி நதி தொடர்பாக எந்தவொரு விவகாரத்திலும் கர்நாடக அரசு, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், தமிழகத்திடம் எந்தவித ஒப்புதலும் இல்லாமல் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். மத்திய அரசு இப்படி அனுமதி அளித்தது சரியான அணுகுமுறையல்ல என தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் தமிழகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் நிச்சயமாக தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.
 மார்கண்டேய நதி குறுக்கே அணை: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசை கர்நாடகம் நாடியது. ஆனால், மார்கண்டேய நதியில் தன்னிச்சையாகச் செயல்பட்டு அணை கட்டப்படுகிறது. இதற்கு என்ன பொருள்? என்றும் மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
 இதை எதிர்த்து தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்துக்கு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு இதை ஏன் தீர்க்கவில்லை? நடுவர் மன்றம் அமைப்பதில் என்ன பிரச்னை? என்று கேட்டதற்கு உடனடியாக நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
 காவிரி ஆணையத் தலைவர்: நீண்ட நாள் போராடி பெறப்பட்ட காவிரி ஆணையத்துக்கு முழு நேரத் தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், எங்களுடைய குறைகளைக் கூற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி ஆணையத்துக்கு உடனடியாக நிரந்தரத் தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
 முல்லைப் பெரியாறு: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சிற்றணை, மண் அணை அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டால்தான் அணையில் 152 அடி நீரைத் தேக்க முடியும். ஆனால், சிற்றணை கட்டப்பட உள்ள இடத்தில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்காமல் தாமதம் செய்கிறது. இதில் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படியும், அணைக்குச் செல்வதற்கு சாலை வசதி வேண்டும் என்றும் கோரப்பட்டது.
 காவிரி-கோதாவரி: காவிரி-கோதாவரியை இணைக்கிறீர்களோ இல்லையோ நாங்கள் காவிரியையும் குண்டாறையும் இணைக்கிறோம். தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இதைச் செயல்படுத்துகிறோம். இதற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட தாமிரபரணி-கருமேனியாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் என்றார் அமைச்சர் துரைமுருகன்.
 இந்தச் சந்திப்பின் போது, தமிழக பொதுப்பணித் துறைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்úஸனா, காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜக் மோகன் சிங் ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT