இந்தியா

தில்யில் கார் திருடும் கும்பலுக்கு காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? போலீஸ் தீவிர விசாரணை

7th Jul 2021 03:04 AM

ADVERTISEMENT

தில்லியில் 100-க்கும் மேலான கார்களைத் திருடி எடுத்துச் சென்று காஷ்மீரில் விற்ற பாகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தில்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இதுதொடர்பாக, மத்திய தில்லி மாவட்டக் காவல் துணை ஆணையர் ஜஸ்மீத் சிங் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை திருடுபோன காரை ஓட்டிச் சென்றபோது ஷெளகத் அகமது (35) மற்றும் முகமது ஜுபர் (22) ஆகிய இருவர் பிடிபட்டனர். அவர்கள் கார் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரிலிருந்து விமானத்தில் தில்லி வந்து இங்குள்ள காரை திருடி அதை மீண்டும் காஷ்மீருக்கு ஓட்டிச் சென்று விற்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று சிங் தெரிவித்தார்.
 முதலில் கார் திருட்டு வழக்கில்தான் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், போலீஸார் அவர்களிடம் இருந்த செல்லிடப்பேசியை ஆய்வு செய்தபோதும், அவர்களிடம் மேல் விசாரணை நடத்தியபோதும் அவர்களுக்கு காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், காஷ்மீர் போலீஸாரும் தில்லி வந்துள்ளனர். இதேபோல தில்லியில் திருடப்பட்ட கார்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய தில்லி போலீஸார் காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் செல்லவிருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 விசாரணையின்போது ஷெளகத் அகமது, தாம் பாரமுல்லா மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இவர் 6 முறை சோபோரிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்துள்ளார். தில்லியில் கார்களைத் திருடி அதை காஷ்மீருக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரது கூட்டாளி யார்?, திருடப்பட்ட கார்கள் யாருக்கு விற்கப்படுகின்றன என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இருவரின் செல்லிடப்பேசிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஆயுதங்கள், ஆளில்லா விமானம், பயங்கரவாதிகள், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற படங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
 இதுதொடர்பாக அகமதுவிடம் விசாரித்தபோது அவர் உண்மையைச் சொல்ல மறுக்கிறார். காஷ்மீரில் உள்ள ஊடகத் துறையுடன் தொடர்பு உள்ளவர் போல் பேசுகிறார். அவரது உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. வெடிமருந்துகளால் ஏற்பட்ட காயம் போல் தெரிகின்றன என்றும் சிங் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்ட இருவரில் ஷெளகத் அகமது காஷ்மீரைச் சேர்ந்தவர். அவரது கூட்டாளியான ஜூபர், உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லியைச் சேர்ந்தவர். அவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
 இவர்கள் இருவரும் ரிங்கு, வாஸிம் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கும்பலாக, எளிதில் பணம் சம்பாதிப்பதற்காக கார் திருட்டுத் தொழிலில் இறங்கியதாகத் தெரியவந்துள்ளது. ரிங்கு தில்லியில் கார்களைத் திருடி அதை ஜூபர் மற்றும் அகமதுவிடம் கொடுத்து விடுவார். அவர்கள் அதை ஓட்டிச் செல்வார்கள்.
 இந்த ஆண்டு மார்ச் மாதம் திருடப்பட்ட கார்களை பெற்றுக் கொள்வதற்காக இருவர் காஷ்மீரிலிருந்து தில்லிக்கு வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்து, கார் திருடும் கும்பலை நாங்கள் கண்காணித்து வந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை ரிங்கு, ஜுபர் மற்றும் அகமது மூவரும் திருடப்பட்ட பலேனோ காரில் வந்து கொண்டிருந்தபோது பாகர்கஞ்ச் அருகே பிடிப்பட்டனர். ஜுபர், அகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், ரிங்கு தப்பியோடிவிட்டார் என்று சிங் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT