இந்தியா

மொபைல், டிவியின் முன்பு அதிக நேரம் இருக்கும் குழந்தைகளுக்கு...

1st Jul 2021 06:01 PM

ADVERTISEMENT

மொபைல், டிவியின் முன்பு அதிக நேரம் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு உடற்பருமன் ஏற்பட வாய்ப்பு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்கள், மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததாகி விட்டன. இதனால் உடல்நலச் சீர்கேடும் அதிகரித்து வருகிறது. 

ஏன், இந்த கரோனா காலத்தில் மாணவர்களுக்கு மொபைல், கணினியில்தான் வகுப்புகள் நடைபெறுகின்றன. அந்த அளவுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மின்னணு சாதனங்களும் சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஒரு புதிய ஆய்வில், அமெரிக்காவில் 9-10 வயதில் அதிக திரை நேர பயன்பாடு உள்ள குழந்தைகள் ஒரு வருடம் கழித்து உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள் 'பீடியாட்ரிக் ஒபேசிட்டி' (Pediatric Obesity) என்ற இதழில் வெளியிடப்பட்டன.

மேலும் மொபைல், டிவி, கணினி என அனைத்து வகையான சாதனங்களுக்கும் செலவழிக்கும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரமும் ஒரு வருடம் கழித்து அதிக உடல் நிறை குறியீட்டுடன் (பிஎம்ஐ) தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொலைக்காட்சி, யூடியூப் வீடியோக்கள், வீடியோ கேம்கள், வீடியோ அரட்டை, குறுஞ்செய்தி ஆகியவற்றைப் பார்ப்பதற்கு செலவழிக்கும் நேரம் அனைத்தும் உடல்பருமனுக்கு வழிவகுக்கும். 

ஆய்வின் தொடக்கத்தில் 33.7 சதவீத குழந்தைகள் உடல் பருமன் கொண்டிருந்த நிலையில் ஒரு வருடம் கழித்து ஆய்வின் முடிவில் இந்த விகிதம் 35.5 சதவீதமாக அதிகரித்தது. இது பதின்ம வயதினரின் பிற்பகுதியிலும்(9-12) முதிர்வயதிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு, நொறுக்குத்தீனிகள் குறித்த விளம்பரங்கள் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குழந்தைகள் சத்தில்லாத உணவுகளை அதிகம் உண்பதற்கு அவர்கள் பார்க்கும் விளம்பரங்களும் முக்கியக் காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல திரையின் முன்பு அதிகநேரம் இருப்பதால் அவர்களின் உடல் இயக்க நேரம் குறைவாகிறது, உடலியக்க விளையாட்டுகளில் ஈடுபடுவது குறைவதும் உடற்பருமனுக்கு காரணம் என்று கூறும் ஆய்வாளர்கள், எதிர்கால இளைஞர்களாகும் இன்றைய குழந்தைகளின் நலன் காக்க இதுகுறித்த ஆய்வு மேலும் தேவை என்றும் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT