நாட்டில் இதுவரை 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று (ஜனவரி 31, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,05,821 பேர் உட்பட, நாடு முழுவதும் 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (37,44,334) கொவைட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,275 முகாம்களில் 2,44,307 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 68,962 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
உலகளவில் தடுப்பூசியை செலுத்தும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான நாடுகள் இந்தியாவிற்கு முன்னரே தடுப்பூசியை வழங்கிய போதிலும் நம் நாடு இந்த சாதனையைப் படைத்துள்ளது.
தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் 63.34 சதவீதத்தினர் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தொடர்ந்து கேரளத்தில் அதிகபட்சமாக 7,032 பேரும், மகாராஷ்டிரத்தில் 1,535 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 547 பேரும் ஒரே நாளில் புதிதாக தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்று கேரளத்தில் 6,282 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,630 பேரும், தமிழகத்தில் 505 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 127 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.