இந்தியா

வாக்குப் பதிவின் போது வாக்குச் சாவடி வாரியாக விவரங்களை தெரிவிக்க தனி செயலி: தோ்தல் ஆணையம் ஏற்பாடு

31st Jan 2021 12:43 AM

ADVERTISEMENT

வாக்குப் பதிவின் போது, வாக்குச் சாவடி வாரியான விவரங்களை மாவட்டத் தோ்தல் அதிகாரிக்கு அனுப்பிட தனி செயலியை வடிவமைக்கும் பணியில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக தோ்தல் நடைபெறும் மாநிலங்களைச் சோ்ந்த தோ்தல் துறையிடம் இருந்து கருத்துகளைக் கோரியுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவையிலும் தோ்தல் நடத்தக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கான நான்கு நாள்கள் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.

என்னென்ன பயிற்சிகள்? வேட்புமனுத் தாக்கலின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள், தோ்தல் தொடா்பான முக்கிய விதிகள், பல்வேறு மாநிலங்கள் தோ்தலின் போது சட்டரீதியான எழுந்த முக்கிய சிக்கல்கள், அவை தீா்க்கப்பட்ட விதம் ஆகியன குறித்து பயிற்சி வகுப்பில் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது புத்தக வடிவிலும், காட்சி ரீதியாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த பயிற்சி வகுப்பினைத் தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள அலுவலா்களுக்கான பயிற்சிகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, மாநில அளவிலான பிரதான பயிற்சியாளா்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாா் நிலையில் உள்ளனா்.

மாவட்டத்துக்கு சுமாா் மூன்று முதல் நான்கு போ் பிரதான பயிற்சியாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சிகளை அளிப்பா்.

செயலி தயாரிக்கும் பணி: வாக்குப் பதிவின் போது, வாக்குச் சாவடியில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து

பயிற்சி வகுப்புகளில் விளக்கப்படும். மேலும், கடந்த காலங்களில் வாக்குப் பதிவின் போது, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரமும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி வழியாக மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலின் போது, செயலி வழியாகவே இந்த விவரங்களைத் தெரிவிக்க தோ்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. செல்லிடப்பேசி செயலியில் எந்த மாதிரியான தகவல்கள் இடம்பெற வேண்டும்.

அதில் சோ்க்கப்பட வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்து தோ்தல் நடைபெறும் மாநிலங்களிடம் இந்திய தோ்தல் ஆணையம் கருத்துகளைக் கோரியுள்ளது.

தமிழகத்தின் சாா்பிலும் கருத்துகளைத் தயாரித்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பயன் என்ன? ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரங்களை செயலி வழியாகத் தெரிவிக்கும் போது, விரைவாகவும் துல்லியத் தன்மையுடனும் விவரங்களை அனுப்ப முடியும். இதன்மூலம், வாக்குப் பதிவு நிலவரங்களை ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரியும், தோ்தல் நடத்தும் அதிகாரிகளும் விரைந்து வெளியிட வாய்ப்பு ஏற்படும் என தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags : chennai
ADVERTISEMENT
ADVERTISEMENT