2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் சமார் 17 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து நாளை அளிக்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்திலும் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி 2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், “இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில் ஏற்பட்ட போலியோ பாதிப்பில், 60 சதவீதம் பாதிப்பு இந்தியாவில் இருந்தது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நாட்டின் கடைசி பாதிப்பு ஹவுராவில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது”, என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.