கொச்சி: மிகச் சரியாக, கேரளத்தில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் இன்று. ஓராண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், கரோனா பேரிடருடனான போர் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
2020-ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி, சீனாவின் வூஹானில் கல்வி பயின்று வந்த மாணவி கேரள மாநிலம் திரிசூர் திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அப்போது, அந்த கரோனா பெருந்தொற்று தங்கள் மாநிலத்தை அப்படியே முடக்கிப்போடப் போகிறது என்று யாருமே கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை 2020 காட்டிச் சென்றுவிட்டது.
ஜனவரி 25-ஆம் தேதி சீனாவின் வூஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புணேவிலிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக 5 நாள்கள் கழித்து பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில், ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் அவர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்பிறகுதான் சீனாவிலிருந்து திரும்பியவர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அது மற்றவர்களுக்கும் பரவியது. மருத்துவ ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக நின்று பேரிடருக்கு எதிரானப் போரை எதிர்கொண்டனர்.
மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் திணறினார்கள்.
ஒரு பக்கம் பரிசோதனை, மறுபக்கம் சிகிச்சை, தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகள் என ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நாடும் கரோனாவிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. தற்போது கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளும் இணைந்து கொண்டுள்ளன.
நாட்டில் கரோனா தொற்றப் பரவல் குறைந்து வந்தாலும், பாதுகாப்பும், எச்சரிக்கை உணர்வும் மக்களுக்கு அவசியம் என்பதை உணர வேண்டும்.