இந்தியா

கேரளத்தில் பாலின சமத்துவம் குறித்து பிப். 11-இல் மாநாடு

27th Jan 2021 05:12 PM

ADVERTISEMENT


கேரளத்தில் பாலின சமத்துவம் குறித்த 2-வது சர்வதேச மாநாடு பிப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள சுகாதாரத் துறை, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இதுகுறித்து பேசியது:

"முதல்வர் பினராயி விஜயன் இந்த மாநாட்டை துவக்கி வைக்கிறார். அப்படியே பாலின சமத்துவப் பூங்காவையும் அவர் தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் பெண்களுக்கான சர்வதேச வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவு விழாவை நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக் துவக்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பற்றிய திட்டங்களின் முன்வரைவு குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம்.  

ADVERTISEMENT

மாநிலத்தில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக பாலினம் பற்றிய அருங்காட்சியகங்கள், நூலகங்கள், மாநாட்டுக்கான மையங்கள் மற்றும் திறந்தவெளி அரங்கங்கள் உள்ளிட்டவை பாலின சமத்துவப் பூங்காவின் முதற்கட்ட பணிகளாக இருக்கும். பாலின சமத்துவப் பூங்கா என்பது உலகளவிலேயே புதிதான ஒன்று. 

இதற்காக ஏற்கெனவே ரூ. 26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் மேலும் ரூ. 15 கோடி ஒதுக்கப்படவுள்ளது. 

50 பேச்சாளர்களைத் தவிர்த்து மொத்தம் 100 பிரதிநிதிகள் 9 முழுமையான அமர்வுகளை நடத்தவுள்ளனர். இதற்கிடையே, கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு மேலும் சில அமர்வுகளும் நடைபெறவுள்ளன. அவர்களில் 30 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் தவிர கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கள வல்லுநர்கள் உள்ளனர்."

பாலின சமத்துவத்தின் முதல் மாநாடு 'பாலினம், நிர்வாகத் திறன் மற்றும் உள்ளடக்கம்' என்ற தலைப்பில் கடந்த 2015-ல் கோவளத்தில் நடைபெற்றது. அப்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கேரள அரசின் திட்டம் வெளியானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT