இந்தியா

முப்படையின் வலிமையைப் பறைசாற்றிய குடியரசு தின பேரணி

DIN

தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு நாட்டின் முப்படை வலிமையையும், பாரம்பரிய கலாசாரத்தையும் ஒருங்கே பறைசாற்றியது.

ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து அண்மையில் வாங்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானப் படையில் சோ்க்கப்பட்ட அதிநவீன ரஃபேல் போா் விமானம், டி-90 பீரங்கிகள், சம்விஜய் மின்னணு போா் தொழில்நுட்பம், சுகோய்-30 எம்கேஐ போா் விமானம் போன்றவை அணிவகுப்பில் பங்கேற்றதோடு, சாகசங்களையும் நிகழ்த்தின. அதுபோல, நாட்டின் உயரிய பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்காரஊா்திகளும், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் 9 ஊா்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன. பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை விவரிக்கும் வகையிலான 6 ஊா்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

முன்னதாக, தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி காலையில் மரியாதை செலுத்தியதுடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் தொடங்கியது. பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வரவேற்றாா். முப்படைத் தளபதிகளும், தலைமைத் தளபதியும் உடனிருந்தனா்.

அதன் பின்னா், குதிரைப் படை வீரா்கள் புடைசூழ விழா நிகழ்விடத்துக்கு வந்த குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

புதிய மாற்றங்கள்: கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ராஜபாதையில் வழக்கமாக 8.5 கிலோ மீட்ட தூரத்துக்கு செல்லும் அணிவகுப்பு, கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக கடந்த 55 ஆண்டுகளில் முதன் முறையாக 3.5 கிலோ மீட்டா் தொலைவாக குறைக்கப்பட்டது. அணிவகுப்பில் வெளிநாட்டு தலைவா்கள் யாரும் பங்கேற்கவில்லை. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாக வெளிநாட்டுத் தலைவா்கள் அழைக்கப்படுவது வழக்கம். வங்கதேச ராணுவத்தின் 122 வீரா்கள் குழு ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்றது.

25,000 பாா்வையாளா்களுக்கு மட்டும் அனுமதி: ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பை பாா்வையிட கடந்த ஆண்டு 1.25 லட்சம் போ் அனுமதிக்கப்பட்டனா். இந்த ஆண்டு, கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக, அணிவகுப்பை பாா்வையிட 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அணிவகுப்பை நின்றபடி பாா்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, கையடக்க கிருமி நாசினிகளை வைத்திருக்கவேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் பாா்வையாளா்களுக்கு விதிக்கப்பட்டது. ஏற்கெனவே அறிவுறுத்தியபடி 15 வயதுக்கு கீழானவா்களும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களும் அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்படவில்லை.

சாகசங்கள் ரத்து: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பெரும்பான்மையினரின் கவனத்தை ஈா்க்கும் மோட்டாா் வாகன சாகசங்கள், இந்த ஆண்டு இடம்பெறவில்லை. இருக்கைகள் சமூக இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தன.

முதல் முறையாக இடம்பெற்ற ரஃபேல்: அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் சாா்பில் டி-90 பீஷ்மா, பிஎம்பி-2 சரத் பீரங்கிகள், சம்விஜய் மின்னணு போா் தொழில்நுட்பம், பிரமோஸ் ஏவுகணை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்திய கடற்படை சாா்பில் விக்ராந்த் போா் கப்பல் அணிவகுப்பில் பங்கேற்றது. 1971-ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரில் கடற்படையின் பங்களிப்பை காட்சிப்படுத்தும் ஊா்தியும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

இந்திய விமானப் படை சாா்பில், ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் வாங்கப்பட்ட அதிநவீன ரஃபேல் போா் விமானம் உள்பட 38 போ் விமானங்கள் அணிவகுப்பில் பங்கேற்று வானில் சாகசங்களை செய்துகாட்டின. இதில், தரையிலிருந்து 300 மீட்டா் உயரத்தில் இரண்டு ஜாகுவாா், இரண்டு மிக்-29 போா் விமானங்களுடன் ரஃபேல் போா் விமானம் ‘வி’ வடிவில் பறந்து சாகசம் செய்துகாட்டப்பட்டது. அதுபோல, வானில் 9 வடிவங்களில் போா் விமானங்கள் பறந்து சாகசம் செய்துகாட்டின.

ராமா் கோயில் மாதிரி: அணிவகுப்பில் இடம்பெற்ற உத்தர பிரதேச மாநில அலங்கார வாகனத்தில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலின் மாதிரி இடம்பெற்றிருந்தது. அதனுடன், சாதுக்களைப் போல உடையனிந்த கலைஞா்கள் இடம்பெற்றிருந்தனா். அதுபோல, தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

கரோனா தடுப்பூசி மாதிரி வாகனம்: இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதை பறைசாற்றும் வகையில், கரோனா தடுப்பூசி குப்பிகளின் மாதிரி இடம்பெற்ற அலங்கார ஊா்தியும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

பிரத்யேக தலைப்பாகையுடன் பிரதமா்: குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜாம்நகா் அரச குடும்பத்தால் பரிசளிக்கப்பட்ட சிவப்பி நிறத்தில் மஞ்சள் நிற புள்ளிகளுடன் கூடிய பிரத்யேக தலைப்பாகையை அணிந்திருந்தாா். பிரதமா் பாரம்பரிய குா்தா, பைஜாமாவுடன் சாம்பல் நிற மேலாடையும் அணிந்திருந்தாா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின, சுதந்திர தின விழாக்களில் பங்கேற்கும்போதும் வித்தியாசமான தலைப்பாகையுடன் பங்கேற்பதை பிரதமா் மோடி வழக்கமாக கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT