இந்தியா

விவசாயிகள் பேரணி: போர்க்களமானது தில்லி

தினமணி

தில்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது.
 வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல்: போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்து பேரணியாகச் செல்ல விவசாயிகள் முயற்சி செய்ததால், தடியடி-கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. பேருந்துகள், போலீஸாரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவற்றின் மீது விவசாயிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர்.
 86 போலீஸார் காயம்: விவசாயிகள்-போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை இணை ஆணையர் உள்பட 85-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இவர்களில் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றியதால் பரபரப்பு நிலவியது.
 எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்: வன்முறை மூலம் பிரச்னைகளுக்கு விவசாயிகள் தீர்வு காண முடியாது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 கூடுதல் துணை ராணுவப் படை-அமைச்சர் அமித் ஷா: அமைதியை நிலைநாட்ட தில்லி போலீஸாருக்கு உதவும் வகையில், கூடுதலாக 16 துணை ராணுவப் படை தொகுதிகளை அனுப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
 பேரணி ஏன்?: வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் வகையில் நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படும் செவ்வாய்க்கிழமை தில்லியில் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியை முன்னெடுக்க விவசாயிகள் முடிவெடுத்தனர்.
 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தில்லி காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்படி, சிங்கு, காஜிப்பூர், திக்ரி, ஷாஜகான்பூர், பல்வல் ஆகிய ஐந்து எல்லைகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் முடிக்க தில்லி, ஹரியாணா காவல் துறைகள் அனுமதியளித்தன.
 எல்லைகளில் குவிந்த விவசாயிகள்: இந்தப் பேரணியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன் பேரில் இந்தியாவின் பல மாநில விவசாயிகளும் டிராக்டர்களுடன் தில்லிக்கு படையெடுத்தனர். பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக தில்லி எல்லைகளில் குவிந்தனர்.
 ஆயிரக்கணக்கில் போலீஸார்-விவசாயிகள்: பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தில்லியின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரர்களும் குவிக்கப்பட்டனர். தில்லியில் பல்லாயிரம் பேர் டிராக்டர்களுடன் குவிந்திருந்தனர்.
 தடுப்புகளை உடைத்தெறிந்து...: ஹரியாணா சிங்கு, திக்ரி எல்லைகளில் காலை 9 மணியளவிலேயே டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடக்கினர். போலீஸார் இதற்கு அனுமதி வழங்காமல் தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டிராக்டர்களை தடுப்புகள் மீது மோதி உடைத்து முன்னேற முயன்றனர். இதைத் தொடர்ந்து தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இதனால், தில்லியின் எல்லைப் பகுதிகள் போராட்டக் களமாக மாறியது. இதேபோல, மற்றைய எல்லைகளான ஷாஜகான்பூர், பல்வல், திக்ரி, காஜிப்பூர் எல்லைகளிலும் முன்னதாக பேரணியைத் தொடங்க முயன்ற விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் விவசாயிகள், காவலர்கள் பரஸ்பரம் காயமடைந்தனர்.
 செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள்: ஐடிஓவில் அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறிய விவசாயிகள், டிராக்டர்களுடன் செங்கோட்டையை அடைந்தனர். செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் இடத்துக்கு சென்ற சில விவசாயிகளும், நிகங் என்ற சீக்கியப் பிரிவைச் சேர்ந்தவர்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர். ஆனால், அங்கு பறந்து கொண்டிருந்த தேசியக் கொடிக்கு அவமரியாதை செலுத்தாமல், அதற்கு கூடுதலாக சீக்கிய மதத்தின் கொடியை அவர்கள் ஏற்றினர்.
 இவர்களை செங்கோட்டையில் இருந்து அகற்ற போலீஸார் முயன்றனர். இதனால், சுமார் 90 நிமிஷங்கள் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செங்கோட்டையில் இருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தினர். இறுதியில் 90 நிமிஷங்களுக்குப் பிறகு விவசாயிகள் செங்கோட்டைப் பகுதியை விட்டு விலகிச் சென்றனர்.
 ஏழு வழக்குகள் பதிவு: தில்லியில் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக போலீஸார் 7 வழக்குகளைப் பதிவு செய்துள் ளனர்.
 பேரணி போராட்டம் நிறுத்தம்
 பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி மூலம் நடத்திய போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளன. மேலும், வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் சில விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 போலீஸாரின் தடுப்புகளை...
 நாடாளுமன்றத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள தில்லி ஐடிஓ பகுதி வழியாக செங்கோட்டைக்குச் செல்ல விவசாயிகளில் ஒரு தரப்பினர் முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டினர். காஜிப்பூர், சிங்கு எல்லைப் பகுதிகளில் இருந்து தில்லியின் முக்கியச் சந்திப்பான ஐடிஓவுக்கு டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள், திடீரென தமது டிராக்டர்களை செங்கோட்டை நோக்கித் திருப்பினர். இவர்களை போலீஸார் பல அடுக்கு தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், தடுப்புகளை டிராக்டர்களை கொண்டு மோதி உடைத்து விட்டு விவசாயிகள் முன்னேறினர். விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
 டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
 தில்லி ஐடிஓ பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நவ்னீத் சிங் (45) என்ற விவசாயி உயிரிழந்தார்.
 அவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் இந்த விவசாயி பலியானதாக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தெரிவித்ததால் குழப்ப நிலை நிலவியது.
 இது தொடர்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில் "தில்லி ஐடிஓ பகுதியில் போலீஸார் அமைத்த தடுப்புகளை டிராக்டரைக் கொண்டு மோதி உடைக்க முயன்ற நவ்னீத் சிங் என்ற விவசாயி, டிராக்டர் கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை' என்றார்.
 மேலும், இது தொடர்பான சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டது. இதில், நீல நிற டிராக்டரை ஓட்டி வரும் ஒருவர், போலீஸார் அமைத்த தடுப்புகள் மீது முழு வேகத்தில் மோதி உடைக்க முயற்சிப்பதும், அப்போது டிராக்டர் கவிழ்வதும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT