இந்தியா

பலத்த பாதுகாப்புக்கு இடையே காஷ்மீரில் குடியரசு தின விழா

27th Jan 2021 03:31 AM

ADVERTISEMENT

காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 ஷேர்-ஏ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் பஷீர் கான் தலைமை வகித்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழாக்கள் நடைபெற்றன.
 குடியரசு தினத்தையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீநகரில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, விழா நடைபெறும் மைதானத்துக்கு செல்லும் சாலைகள் தடுக்கப்பட்டிருந்தன. சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்காக டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
 காஷ்மீரில் நிலவிய கடுமையான குளிருக்கு இடையே காவல் துறையினர், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷெர் இ காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் அணிவகுப்புக்காக காத்திருந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், உடல் நலக் குறைவின் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 குடியரசு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் இணையதள சேவை, செல்லிடப்பேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செல்லிடப்பேசியை பயன்படுத்தி ஐ.இ.டி. குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்வதால் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் காஷ்மீரில் செல்லிடப்பேசி, இணையதள சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT