இந்தியா

போக்குவரத்து விதியை மீறினால் காப்பீட்டுக் கட்டணம் உயரும்!

26th Jan 2021 07:31 AM

ADVERTISEMENT


புது தில்லி: போக்குவரத்து விதிகள் மீறலுடன், வாகனக் காப்பீட்டை இணைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. ஒருவர் சாலை விதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால், அவை குறித்த தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுடன் பகிரப்பட்டு, வாகனத்துக்கான காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயிக்க அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுத்திருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ. என்று அழைக்கப்படும் காப்பீட்டு ஒழுங்காற்று / வளர்ச்சி ஆணையம்.

இது தொடர்பான மாதிரி விதிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் கருத்துக்காக அந்த விதிகள் ஐ.ஆர்.டி.ஏ.வால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு சாலை விதிமீறலுக்கும் தனித் தனியாக "பாயிண்ட்டுகள்' நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன (பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது). அதனடிப்படையில்தான், வருங்காலத்தில் காப்பீடு கோரும்போது வாகனங்களுக்குக் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. அதிக அளவில் விதிமுறை மீறல்கள் இருந்தால் அதற்கேற்றாற்போல காப்பீட்டுக் கட்டணமும் அதிகரிக்கும்.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவருக்குத் தான் மிக அதிகமான பாயிண்ட்டுகள். வாகனச் சேதம், மூன்றாம் நபர் காப்பீடு, கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீடு ஆகியவற்றுக்கு விதிமுறை மீறல் அடிப்படையில் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அந்த வரைவில் கூறப்பட்டிருக்கிறது. வேலைக்கு அமர்த்தப்பட்ட ஓட்டுநர் விதிமுறை மீறலில் தண்டிக்கப்பட்டாலோ, அபராதம் செலுத்தியிருந்தாலோ, அதன் பாதிப்பும் வாகனத்தின் உரிமையாளரைத்தான் சேரும் என்கிறது வரைவு. 

ADVERTISEMENT

காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக ஐ.ஆர்.டி.ஏ. சில முடிவுகளை அறிவித்திருக்கிறது. வாகனக் காப்பீட்டு எடுப்பதற்கோ, ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டை புதுப்பிப்பதற்கோ, அணுகும்போது அந்த வாகனம் குறித்த விதிமுறைமீறல் குறித்த விவரங்களைப் பெறுவதற்கு அந்த நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது ஐ.ஆர்.டி.ஏ. வாகனத்தை ஓட்டுபவர் யார் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வாகனத்தின் அடிப்படையில்தான் விதிமுறை மீறல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

வாகனம் வாங்குபவர் விதிமுறை மீறல்களில் அபராதம் செலுத்தி இருந்தாலோ, உபயோகித்த வாகனத்தை ஒருவர் வாங்குவதாக இருந்தாலோ அவை காப்பீட்டுக் கட்டண நிர்ணயத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. பழைய விதிமுறை மீறல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

புதிய நடைமுறையை உருவாக்கும் பொறுப்பு ஐ.ஆர்.டி.ஏ.யின் கீழ் செயல்படும் இன்ஷூரன்ஸ் இன்பர்மேஷன் ப்யூரோ என்கிற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவரங்களை சேகரிப்பதும், பகிர்ந்து கொள்வதும் எப்படி என்று அந்த அமைப்பு விதிமுறைகளை உருவாக்கும். மாநிலங்களிலுள்ள போக்குவரத்துத் துறையுடனும், தேசிய தகவல் மையத்துடனும் இணைத்து அந்த அமைப்பு எல்லா தகவல்களையும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தில்லியில் முதலில் பரிசோதனை அடிப்படையில்  இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி இது குறித்துத் தனது முடிவுகளை அறிவிப்பது என்று ஐ.ஆர்.டி.ஏ. தீர்மானித்திருக்கிறது.

                      விதிமீறல்                              பாயிண்ட்
மது போதையில் வாகனம் ஓட்டுதல்    - 100
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்     - 90
காவல் துறையை மதிக்காத போக்கு    - 90
அதிவேகமாக ஓட்டுதல்    - 80
காப்பீடு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது    - 70
தவறான பாதையில் ஓட்டுவது    - 60
ஆபத்தான பொருள்களைக் கொண்டு செல்வது    - 50
சிக்னல் மீறுதல்    - 50
கூடுதல் பாரம் ஏற்றிச் செல்வது    - 40
பாதுகாப்பு விதிகள் மீறல்    - 30
பார்க்கிங் விதிமீறல்கள்    - 10

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT