இந்தியா

தில்லி அணிவகுப்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுடன் தமிழக அலங்கார ஊர்தி

26th Jan 2021 11:18 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டின் 72-வது குடியரசு நாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புது தில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் நிகழ்ச்சியில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுடன் கூடிய தமிழகத்தின் ஊர்தி இடம்பெற்றது.

நாட்டின் 72-ஆவது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, புது தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது.

துறைகளின் அணிவகுப்புக்குப் பின் மாநிலங்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. 

ADVERTISEMENT

அந்தவகையில், தமிழக அரசின் சார்பில்,  பல்லவர்களின் பெருமைய பறைசாற்றும், மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரி அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது. 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்ற பாடல் ஒலிக்க, நடனக் கலைஞர்கள் அதற்கேற்றவாறு நடனமாடியபடிச் சென்றனர்.

அதுபோலவே, அமர்நாத் கோவில் அலங்காரத்துடன் உத்ராகண்ட் மாநில ஊர்தி உள்பட பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினர்கள் இன்றி புது தில்லி ராஜபாதையில், நாட்டின் 72-ஆவது குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

குடியரசு நாள் விழாவில் இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு, துணை ராணுவப் படை வீரர்கள், தில்லி காவல்துறையினரின் வீரநடை, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டக அணிவகுப்பு, தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் உற்சாக அணிவகுப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக புது தில்லி ராஜபாதையில் 8.50 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3.50 கிலோ மீட்டருக்கு மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகளை பார்வையிட 4,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

Tags : Republic Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT