இந்தியா

வெளியூரிலேயே வாக்களிக்கும் வசதி: விரைவில் ஒத்திகை தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்

26th Jan 2021 07:33 AM

ADVERTISEMENT


புது தில்லி: வெளியூர்களில் வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்களிப்பது தொடர்பான ஒத்திகை விரைவில் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

11ஆவது தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தங்கள் வாக்குச்சாவடியில் இருந்து தொலைதூரத்தில் வசிப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே, தொழில்நுட்ப வசதியைக் கொண்டு வாக்களிப்பதற்கான ஆராய்ச்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதில் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறோம். இது தொடர்பான பரிசோதனை விரைவில் தொடங்கும். இதற்கென புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், புதுச்சேரிக்கு தேர்தல் ஆணையத்தின் குழு ஆய்வு நடத்துவதற்காக விரைவில் செல்ல இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் மேற்கு வங்கம், அஸ்ஸாமிலும் தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது என்றார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக முன்னாள் மூத்த துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா ஏற்கெனவே கூறியதாவது:

இந்தத் திட்டம் வீட்டிலிருந்தே வாக்கு செலுத்துவது அல்ல. உதாரணமாக, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது என்றால் சென்னையைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தில்லியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் தனது வாக்கை செலுத்த சென்னைக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் வாக்களிக்க இயலாமல் போய்விடும். இதனைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் தில்லியில்  அமைக்கப்படும் மையத்துக்கு அந்த வாக்காளர் சென்று வாக்களிக்கலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரிடம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னதாக, வாக்காளரின் அடையாளமானது வாக்குப் பதிவு இயந்திரத்தில் நிறுவப்பட்ட பிறகு, "கருப்பு சங்கிலி' தொழில்நுட்பத்தின் உதவியால் "இ-பேலட்' தாள் உருவாகும். வாக்கு செலுத்தப்பட்ட பிறகு, "பேலட்' அதனைப் பாதுகாப்பான முறைக்கு மாற்றும். மேலும் "கருப்பு சங்கிலி ஹேஷ்டேக்' உருவாகும். அந்த "ஹேஷ்டேக்' அறிவிப்பானது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் என தேர்தல் நடைமுறையில் தொடர்புடைய பலதரப்பட்டவர்களுக்கும் செல்லும். இந்த வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT