இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடரும்:  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

26th Jan 2021 07:32 AM

ADVERTISEMENT


புது தில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) என்பது சாதாரண இந்தியருக்கு அதிகாரம் அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதம் என்பதால் அதுவே வரும் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். 

தில்லியில் நடைபெற்ற 11-ஆவது தேசிய வாக்காளர் தின நிகழ்வில் அவர் மேலும் பேசியதாவது:
"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து நம்மில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் இவிஎம் என்பது நாட்டிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் வெவ்வேறு பகுதிகளிலும், மாறுபட்ட அளவில் அதிகாரம் அளித்த ஒரு கருவி என்பதை மறுக்க முடியுமா? 

சில கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் இவிஎம்-களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குள்ளாக்கியுள்ளன. ஆனால், இந்த இயந்திரங்கள் சேதமடையாதவை என்ற நம்பிக்கையை தேர்தல் ஆணையம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது என்பது முன்னர் சாதாரண விஷயமாக இருந்தது.  இதுபோன்ற செயல்களால் எனது சொந்த மாநிலமான பிகார் இழிச்சொல்லுக்கு ஆளானது. இதெல்லாம் ஒருகாலத்தில் நடைபெற்ற விஷயம். தற்போதைய சூழலில் இவிஎம் உள்ளிட்ட மற்ற மின்னணு கருவிகள் டிஜிட்டலாக்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பான சந்தேகங்களைப் புறந்தள்ள வேண்டியது அவசியம். 

சாதாரண இந்தியர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட எந்தவொரு கருவியும் வரவேற்கப்பட வேண்டும். தில்லியில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் பாஜக வென்றது. அதேசமயம் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றியை இழந்தது. இந்தத் தேர்தல்களில் இவிஎம் தான் பயன்படுத்தப்பட்டது என்பதால் இதனை நாம் ஒப்புக்கொண்டே தீர வேண்டும். எனவே இவிஎம்-ஐ நாம் மதிக்க வேண்டிய அவசியம். 

ADVERTISEMENT

பொதுவாக தொழில்நுட்பம் என்பது ஒரு சிறந்த செயல்பாட்டாளராக இருக்கும். இது அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி, நமக்கு வசதியாகவும் இருக்கிறது. எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது  தலைவரையோ எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அவரை பதவி இழக்கச் செய்ய ஒரு சாதாரண இந்தியரால் முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றார். 

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி மூலம் சிறப்புரையாற்றானார். முன்னாள் அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள்,  பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT