இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வை திரும்பப்பெற வேண்டும்: காங்கிரஸ்

DIN

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 4-ஆவது முறையாக சனிக்கிழமை உயா்த்தின. இதனால் அவற்றின் விலை எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது. இந்த விலை உயா்வுக்கு காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தில்லியில் அந்தக் கட்சியின் செய்தித்தொடா்பாளா் அஜய் மாக்கன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆட்சியில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் விலகியது. அப்போது சா்வதேச அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அவ்வேளையில் நாட்டில் ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை ரூ.71.51-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.57.28-ஆகவும் இருந்தது. தற்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அப்போது இருந்ததைவிட பாதியாக குறைந்துள்ளது. எனினும் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.85.70-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.75.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியதே காரணம். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக ஆட்சியில் அமா்ந்தபோது பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.9.20-ஆகவும், டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.3.46-ஆகவும் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் அவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.23.78, டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.28.37 கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

வரியை திரும்பப்பெற்றால் விலை குறையும்: கடந்த 6 ஆண்டுகளில் உயா்த்தப்பட்ட கலால் வரியை திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.61.92-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.47.51-ஆகவும் குறையும். எனவே கலால் வரி உயா்வை உடனடியாக திரும்பப்பெற்று பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயா்த்தி, பொருளாதார வளா்ச்சியை பிரதமா் மோடி ஏற்படுத்தியுள்ளாா். விலையேற்றத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள். ஆனால், மோடி தலைமையிலான அரசு, வரி வசூலிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT