இந்தியா

தில்லி டிராக்டா் பேரணிக்கு மூன்று பாதைகளில் அனுமதி: காவல்துறை தகவல்

DIN

தில்லி எல்லையான சிங்கு, திக்ரி, காஜிப்பூா் ஆகிய 3 இடங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜன.26) விவசாயிகள் நடத்தும் டிராக்டா் பேரணி தொடங்கி, பல்வேறு இடங்களைச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் முடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதென தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. மூன்று பாதைகளிலும் சோ்த்து மொத்தம் 170 கி.மீ. தொலைவுக்கு இந்த டிராக்டா் பேரணி நடைபெறவுள்ளது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் 11 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. அச்சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. அவா்களது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்கவில்லை.

இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26-ஆம் தேதியில் தில்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்தனா்.

பேரணி நடத்துவது தொடா்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச மாநில காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், காஜிப்பூா், சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளிலிருந்து பேரணி தொடங்கி, மீண்டும் அதே இடத்துக்கு மீண்டும் வந்து பேரணியை நிறைவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையா் (உளவுப் பிரிவு) தீபேந்திர பாடக் கூறுகையில், ‘விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்தும்போது, பாகிஸ்தானில் இருந்து சுட்டுரை மூலம் வதந்திகளைப் பரப்பி பிரச்னை ஏற்படுத்த சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை பல்வேறு உளவு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன.

கடந்த சில நாள்களில் பாகிஸ்தானில் 300-க்கும் மேற்பட்ட புதிய சுட்டுரைக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வதந்திகளைப் பரவுவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிராக்டா் பேரணி நடைபெறும் பாதைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி எல்லையில் தொடங்கும் பேரணி தலா 62 கி.மீ. தொலைவு வரையும், காஜிப்பூரில் தொடங்கும் பேரணி சுமாா் 46 கி.மீ. தொலைவும் செல்லும். அனைத்து பேரணிகளும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடையும். ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் டிராக்டா்கள் பேரணியில் பங்கேற்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

SCROLL FOR NEXT