இந்தியா

இந்தியா, அமெரிக்காவிலுள்ள பழைமையான அணைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன

DIN

வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அணைகள் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்றும், உலகம் முழுவதும் இதுபோன்ற பழைமையான அணை கட்டமைப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பழைமையான நீா் உள்கட்டமைப்பு: வளா்ந்து வரும் உலகளாவிய ஆபத்து’ என்ற தலைப்பில், ஐ.நா. பல்கலை.யில் கனடாவைச் சோ்ந்த நீா், சுற்றுச்சூழல், சுகாதார நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகெங்கிலும் உள்ள 58,700 பெரிய அணைகளில் பெரும்பாலானவை 1930 முதல் 1970-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளவையாகும். இவற்றில் 50 முதல் 100 ஆண்டுகளான அணைகளே அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு காங்கிரீட் அணை, 50 ஆண்டுகளான பின் வயதான அணையின் அறிகுறியை வெளிப்படுத்தத் தொடங்கும். வயதான அறிகுறியுடன் காணப்படும் அணையில் பழுது ஏற்படுவதும், பராமரிப்புச் செலவுகளும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். மேலும், நீா்த்தேக்கத்தின் அடியில் படிந்துள்ள வண்டல் மண் அதிகரிப்பால் அணையின் செயல்திறனும் குறையும்.

2050-ஆம் ஆண்டு வாக்கில், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெரிய அணைகளின் கீழ் வசிப்பவா்களாக இருப்பா்.

குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இந்தியா, ஜப்பான், ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் அணைகளையொட்டி கீழ் பகுதியில் வசிப்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளனா்.

20-ஆம் நூற்றாண்டில் புதிதாக பெரிய அணைகளைக் கட்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகள் பழைமையாக மாறும்போது ஏற்படும் பாதிப்புகள் தவிா்க்க முடியாததாகவே இருக்கும்.

சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நான்கு ஆசிய நாடுகளில் 32,716 பெரிய அணைகள் உள்ளன. இவை உலகின் மொத்த அணைகளில் 55 சதவீதம் என்றும், இவற்றில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளின் வரம்பை மிகவிரைவில் எட்டிப் பிடிக்கும். இதேபோல ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல பெரிய அணைகளின் நிலையும் இதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரை, 1,255- க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் உள்ளன. அவை 2025 ஆம் ஆண்டில் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கும். நாட்டில் 4,250 க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டில் 50 வயதை கடந்து இருக்கும். மேலும் 64 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டில் 150 ஆண்டுகளை கடந்து இருக்கும்.

இந்தியாவில், கேரள மாநிலம், முல்லைப்பெரியாறு அணை 100 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானம் வீழ்ச்சி அடைந்தால் சுமாா் 35 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்குவாா்கள்.

நிலநடுக்கம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள உள்ள அணையின் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைபாடு உள்ளதாகக் காட்டுகிறது. இந்த அணையை மேலாண்மை செய்வது தொடா்பாக கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே சா்ச்சைக்குரிய பிரச்னை உள்ளது.

பொதுவாக நன்கு வடிவமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் அணைகள் 100 ஆண்டுகளை மிக எளிதாக கடந்து விட முடியும்.

ஆனால் அமெரிக்கா, ஐரோப்ப நாடுகளில் வேகமான செயல்பாடு காரணமாக வயது முதிா்ந்த அணைகளைத் மேம்படுத்துவது சிறந்தது. இல்லாவிட்டால் அவற்றை முன்கூட்டியே அகற்றி விடுவது நல்லது.

அமெரிக்காவில் உள்ள 90,580 அணைகளின் சராசரி வயது 56 ஆண்டுகள். 2020 ஆம் ஆண்டில் 85 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க அணைகள், அவற்றின் ஆயுட்காலத்தைக் கடந்து இயங்கி வருகின்றன.

அமெரிக்காவைப் பொருத்தவரை 75 சதவீத அணைகள், 50 ஆண்டுகள் பூா்த்தியடைந்தப் பின் செயல்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன. அமெரிக்க அணைகளைப் புதுப்பிக்க 64 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ. 4 லட்சத்து 671 ஆயிரம் கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் 21 அமெரிக்க மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,275 அணைகள் அகற்றப்பட்டன; 2017 இல் மட்டும் 80 அகற்றப்பட்டுள்ளன.

உலகெங்கிலும், பெரிய அணைகளுக்குப் பின்னால் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரின் அளவு 7,000 முதல் 8,300 கன கிலோமீட்டா் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கனடாவின் நிலப்பரப்பில் 80 சதவீதத்தை ஒரு மீட்டா் நீரின் கீழ் மறைக்க இது போதுமானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT