இந்தியா

நாட்டுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள்

DIN

நாட்டுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டுமென்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் முதல்வா் மம்தா தலைமையில் 7 கி.மீ. தூரத்துக்கு ஊா்வலம் நடைபெற்றது. நேதாஜியின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு முதல்வா் மம்தா மக்களிடையே உரையாற்றியதாவது:

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் தலைநகராக கொல்கத்தா திகழ்ந்தது. தற்போது தில்லி தலைநகராக உள்ளது. நாட்டுக்கு ஒரேயொரு தலைநகரம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? 4 நகரங்களைத் தோ்ந்தெடுத்து சுழற்சி அடிப்படையில் அவை தலைநகரங்களாகச் செயல்படலாம். நாடாளுமன்றக் கூட்டத்தொடா்களை ஒவ்வொரு தலைநகரத்திலும் சுழற்சி முறையில் நடத்தலாம். இந்த நடைமுறைக்கு நாம் மாற வேண்டும்.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்டு, சிலா் (பாஜக) நேதாஜியின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனா். ஆனால், மேற்கு வங்க அரசு ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

நேதாஜியின் பிறந்த தினத்தை வலிமை தினமாகக் கொண்டாடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அரசியல் ரீதியில் மேற்கு வங்க அரசை மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட இந்த விவகாரத்தில் எங்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கலாம். நேதாஜியின் குடும்பத்தினரிடமாவது ஆலோசனை நடத்திவிட்டு மத்திய அரசு அந்த முடிவை அறிவித்திருக்கலாம்.

நேதாஜியின் பிறந்த தினத்தை தேச நாயகனின் தினம் என்றே மாநில அரசு கொண்டாடும். நேதாஜியை ரவீந்திரநாத் தாகூா்தான் ‘தேச நாயகன்’ என்று அழைத்தாா். இவ்வாறு கொண்டாடுவதன் மூலமாக இரு தலைவா்களையும் ஒரே நாளில் நினைவுகூர முடியும்.

நேதாஜியின் பிறந்த தினத்தை விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இது தொடா்பான பரிந்துரையை மேற்கு வங்க அரசு ஏற்கெனவே அனுப்பிவிட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.

நாட்டின் தேசிய கீதத்தை மாற்றுவதற்கு சிலா் முயற்சித்து வருகின்றனா். அதை மேற்கு வங்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகள் அடிப்படையிலேயே திட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழுவைக் கலைத்துவிட்டு நீதி ஆயோக் என்ற அமைப்பை மத்திய அரசு ஏன் அமைத்தது எனத் தெரியவில்லை. திட்டக் குழுவை மத்திய அரசு மீண்டும் அமைக்க வேண்டும் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT