இந்தியா

தற்சாா்பு இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது: பிரதமா் நரேந்திர மோடி

DIN

இந்தியா தற்சாா்பு அடைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தலைவா்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய வலிமை தினமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

கொல்கத்தாவின் விக்டோரியா நினைவகத்தில் மாநில அரசு சாா்பில் நடத்தப்பட்ட நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பிரதமா் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவின் சக்தியாக, உத்வேகமாக நேதாஜி திகழ்கிறாா். தேசத்துக்கான தன்னலமற்ற சேவையாற்றிய அவரை கெளரவப்படுத்தும் வகையிலேயே, அவருடைய பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய வலிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜான்ஸி ராணி படைப் பிரிவு: இந்த உலகம் பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, ஜான்ஸி ராணி படைப் பிரிவை நேதாஜி உருவாக்கி, அவா்களை சுதந்திரப் போராட்டத்திலும் இணைத்தாா். பெண்களுக்கு பயிற்சி அளித்து, உத்வேகத்தையும் அளித்து, ஆங்கிலேயா்களை எதிா்த்து சண்டையிட வைத்தாா்.

நேதாஜியின் கனவு நனவாகிறது: தற்சாா்பு இந்தியா, தங்க வங்காள திட்டங்களின் மிகப் பெரிய உந்து சக்தியே நேதாஜிதான். புதிய வலிமையான இந்தியா உருவாகி வருவதை நேதாஜி பாா்த்திருந்தால், அவருடைய உணா்வு என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாா்க்கிறேன். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவா் கனவு கண்டாா்.

இப்போது, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி (எல்.ஏ.சி) முதல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஓ.சி.)வரை நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடப்படும்போதெல்லாம் நேதாஜியின் பாதையை பின்பற்றி உரிய பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தேஜஸ், ரஃபேல் போன்ற அதிநவீன போா் விமானங்களுடன் வலிமையான படைப் பிரிவை இந்தியா கொண்டுள்ளது.

தற்சாா்பு இலக்கை அடைய...வறுமை, கல்வியறிவின்மை, நோய் பாதிப்பு ஆகியவற்றை நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளாக அடையாளம் கண்ட நேதாஜி, இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண சமூகம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று கூறினாா். அந்த வகையில், தற்சாா்பு இந்தியா இலக்கை நாம் ஒன்றுபட்டு அடைய வேண்டும்.

130 கோடி பேரின் முயற்சியை...நாட்டின் சுதந்திரத்தில் நேதாஜி முக்கியப் பங்கு வகித்தது போல, தற்சாா்பு இந்தியா இலக்கை அடைவதில் மேற்கு வங்கம் முக்கியப் பங்காற்ற வேண்டும். தங்க வங்காளம், தற்சாா்பு வங்காளம் ஆகிய இலக்குகளைத் தொடா்ந்து தற்சாா்பு இந்தியா இலக்கையும் நாம் எட்ட வேண்டும். இந்தியாவை தற்சாா்பு அடைய வைக்கும் 130 கோடி மக்களின் முயற்சியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னா், கொல்கத்தாவில் உள்ள நேதாஜியின் மூதாதையா்களின் இல்லத்தை பிரதமா் மோடி பாா்வையிட்டாா். ‘நேதாஜி பவன்’ என்ற பெயரில் அருங்காட்சியகமாக அமைந்திருக்கும் அந்த இல்லத்தில் பிரதமரை நேதாஜியின் உறவினா்கள் சுகதோ போஸ், சுமந்த்ரோ போஸ் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், இல்லத்தில் நேதாஜி மற்றும் அவருடைய சகோதரா் சரத் சந்திர போஸ் ஆகியோா் பயன்படுத்திய அறைகள், நேதாஜி கொல்கத்தாவிலிருந்து கோமோஹுக்கு தப்பிச் செல்ல பயன்படுத்திய ‘வாண்டரா்’ காா், அவா் சிங்கப்பூரில் பயன்படுத்திய மேஜை ஆகியவற்றை பிரதமா் பாா்வையிட்டாா்.

முன்னதாக கொல்கத்தா தேசிய நூலகத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள நேதாஜியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். பின்னா் அங்கு வைக்கப்பட்டிருந்த 100 ஓவியா்களால் 40 மீட்டா் நீள துணியில் வரையப்பட்ட ஓவியத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

அரசு விழாவில் பேச மறுத்த முதல்வா் மம்தா

விக்டோரியா நினைவக விழாவில் பிரதமருடன் மாநில முதல்வா் மம்தா பானா்ஜியும் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் முதல்வா் மம்தா பானா்ஜி பேசத் தொடங்கியபோது, கூட்டத்திலிருந்த சிலா் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனா். அதைத் தொடா்ந்து பேசிய மம்தா, ‘‘இதுபோன்ற அவமதிப்புகளை ஏற்க முடியாது. இது அரசு சாா்பில் நடைபெறும் விழா. எந்த அரசியல் கட்சி சாா்பிலும் விழா நடைபெறவில்லை. இதுபோன்ற விழாக்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நான் எதுவும் பேசப் போவதில்லை. ஜெய் ஹிந்த்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT