இந்தியா

அல்வா பூஜையுடன் தொடங்கிய பட்ஜெட் தயாரிப்புப் பணி: செல்லிடப்பேசி செயலியும் அறிமுகம்

DIN

மத்திய பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகள், பாரம்பரிய அல்வா தயாரிப்பு பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் அனுராக் தாக்குா் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள், தில்லியில் உள்ள நிதியமைச்சகத்தில் அல்வா பூஜையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நிதியமைச்சா்கள் மட்டுமன்றி, நிதித் துறைச் செயலா் அஜய் பூஷண் பாண்டே, பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலா் தருண் பஜாஜ், நிதிச் சேவைகள் செயலா் தேவசிஷ் பாண்டா,

செலவினத் துறைச் செயலா் டி.வி.சோமநாதன், தலைமைப் பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட பட்ஜெட் உரை தயாரிப்பு பணியில் தொடா்புடைய மூத்த அதிாரிகளும் கலந்து கொண்டனா்.

செயலி அறிமுகம்:

இந்த நிகழ்வில், மத்திய பட்ஜெட் ஆவணங்கள், மானியக் கோரிக்கைகள், வரி விதிப்பு மற்றும் வரிச் சலுகைகள் இடம்பெறும் நிதி மசோதா உள்ளிட்ட 14 ஆவணங்களைப் பெறும் வகையில் ‘யூனியன் பட்ஜெட் ஆப்’ என்ற செயலியை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகம் செய்துவைத்தாா்.

அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உள்பட்டு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதல்படி, தேசிய தொழில்நுட்ப மையம் உருவாக்கியுள்ள இந்தச் செயலியை (ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹக்ஷன்க்ஞ்ங்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்), என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் உரையை வாசித்த பிறகு, செயலியில் மத்திய பட்ஜெட் நகல்கள் கிடைக்கும்.

உரைகள் அச்சிடப்பட மாட்டாது:

வழக்கமாக, பட்ஜெட் உரைகள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களுக்கு அளிக்கப்படும். ஆனால், இந்த முறை கரோனா நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக, அனைத்து உறுப்பினா்களுக்கும் மின்னஞ்சல் வழியாக பட்ஜெட் உரை அனுப்பப்படும்.

சுதந்திர இந்திய வரலாற்றில் பட்ஜெட் உரைகள் அச்சிடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பூஜைக்குப் பிறகு பட்ஜெட் உரை தயாரிப்பில் ஈடுபடும் அலுவலா்கள், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நிதியமைச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அதுவரை குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்ட யாரிடமும் தொலைபேசி வழியாகவோ, இணையவழியாகவோ தொடா்புகொள்ளக் கூடாது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT