உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
அப்போது கோயில்கள் சேதப்படுத்தப்படுவதில் ஜெகன்மோகன் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பவண் கல்யாண் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் ஆகியோர் நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.