இந்தியா

சர்வதேச எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு; 10 நாள்களில் 2வது

23rd Jan 2021 03:03 PM

ADVERTISEMENT

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், ஹிரா நகரில் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் வகையில்  தோண்டப்பட்ட ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 10 நாள்களில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது சுரங்கப்பாதை இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிராநகரின் பன்சார் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்த ரகசிய சுரங்கப் பாதையைக் கண்டுபிடித்துள்ளனர்.  

கடந்த 10 நாள்களில் இதே ஹிராநகரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது சுரங்கம் இது என்றும், 6 மாதங்களில் இது 4வது சுரங்கப்பாதை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீட்டர் நீள சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்)ஜனவரி 13-ம் தேதி கண்டுபிடித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில், பாகிஸ்தானையொட்டிய எல்லைப்புற மாவட்டம் கதுவா. இந்த மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுரங்கப் பாதை தோண்டி அதன் மூலம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் செக்டாரில் உள்ள போபியான் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீட்டர் நீள சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சுரங்கப் பாதையின் மறுபுறம் பாகிஸ்தான் பகுதியாகும். இப்பகுதியை பயங்கரவாதிகள் தங்கள் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். இது சுமார் 30 அடி உயரத்தில், 3 அடி அகலத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28, நவம்பர் 22 ஆகிய நாள்களில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இதுபோன்ற இரண்டு சுரங்கப் பாதைகளை பிஎஸ்எஃப் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : Kashmir J&K Kathua
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT