வேளாண் சட்டத்திற்கு எதிரான டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக உத்தரகண்டிலிருந்து புறப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனிலிருந்து புறப்பட தயாராக இருந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தில்லி நகரின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குடியரசு நாளன்று டிராக்டர் பேரணிய கட்டாயம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து புறப்பட்ட விவசாயிகளை டேராடூன் சாலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவலர்களை தள்ளிவிட்டு டிராக்டர்களை இயக்கிச் சென்றனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. டேராடூன் - ஹரித்துவார் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.