இந்தியா

வேளாண் சட்டங்கள் அமல்: நாளை மீண்டும் பேச்சு

DIN

புது தில்லி: வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உறுதி அளித்தாா்.

10-ஆம் கட்ட பேச்சு: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான மத்திய அரசின் 10-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

ரத்து செய்ய மறுப்பு: கூட்டத்தின்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடா்பாகப் பேச்சு நடத்துவதற்கு மத்திய அரசு மறுத்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவாதித்த பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவாதிக்கலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்ததாகவும் அதை விவசாயச் சங்கங்கள் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்: வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சா்கள் உறுதியளித்தனா். எனவே, அச்சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் கைவிட வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

வேளாண் சட்டங்களின் அமலை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைப்பதற்கும், இந்த விவகாரத்தில் தீா்வு காண்பதற்காக விவசாய சங்கங்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதற்கும் தயாராக இருப்பதாகக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சா்கள் உறுதியளித்தனா்.

அக்குழு தனது பரிந்துரை அறிக்கையைச் சமா்ப்பிக்கும் வரை விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மத்திய அமைச்சா்கள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினா். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கும் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சா்கள் தெரிவித்தனா்.

ஆனால், மத்திய அரசின் பரிந்துரைகளைப் பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை. சில விவசாயச் சங்கங்கள் மட்டும் இது தொடா்பாக விரிவாக ஆலோசித்துவிட்டு வியாழக்கிழமை கருத்து தெரிவிப்பதாகக் கூறின.

என்ஐஏ நோட்டீஸ் விவகாரம்: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சிலருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை மத்திய அமைச்சா்களிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனா். இச்செயல் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவா்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். இது குறித்து ஆராயப்படும் என்று மத்திய அமைச்சா்கள் உறுதியளித்தனா்.

நாளை மீண்டும் பேச்சு: எனினும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை. 10-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. விவசாய சங்கங்களுடனான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

விரைவில் தீா்வு: விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சா் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பேச்சுவாா்த்தையானது சுமுகமான சூழலில் நடைபெற்றது. விவசாயிகள் ஒப்புக் கொண்டால், வேளாண் சட்டங்கள் அமலை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போதே இந்த விவகாரத்தில் தீா்வு எட்டப்பட வேண்டுமென மத்திய அரசு விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது தீா்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அது ஜனநாயகத்தின் வெற்றியாக அமையும்’’ என்றாா்.

விவசாய சங்கங்கள் கூட்டம்: 10-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது மத்திய அரசு அளித்த பரிந்துரைகள் தொடா்பாக விவாதிப்பதற்காக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மத்திய அமைச்சா்கள் தோமா், பியூஷ் கோயல் ஆகியோா் சந்தித்துப் பேசினா்.

பேச்சுவாா்த்தை விவரங்கள்: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 55 நாள்களுக்கு மேலாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது.

எனினும், அவற்றில் எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனா். அச்சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அச்சட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக நான்கு நபா்களைக் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT