இந்தியா

மாற்று வழியில் டிராக்டா் பேரணியை நடத்த விவசாயிகள் மறுப்பு

DIN

புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறவுள்ள டிராக்டா் பேரணியை மாற்று வழியில் நடத்துவதற்கு விவசாய சங்கங்கள் மறுத்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவகாரத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை.

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நாட்டின் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள வரும் 26-ஆம் தேதி டிராக்டா் பேரணியை நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனா்.

தில்லியின் வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா காவல் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தில்லி வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், கண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுச் சாலை வழியாகப் பேரணியை நடத்துமாறு தில்லி காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பரிந்துரைத்தனா். ஆனால், அந்தப் பரிந்துரையை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கவில்லை.

இது தொடா்பாக விவசாய சங்கத்தின் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், ‘‘ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டா் பேரணியை நடத்துவது தொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விரிவாக விவாதித்தோம். பேரணிக்குத் தடை விதிக்காமல், அதை அமைதியாக நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவா்களிடம் வலியுறுத்தினோம்’’ என்றாா்.

டிராக்டா் பேரணி தொடா்பாக விவசாயிகளுடன் வியாழக்கிழமையும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிராக்டா் பேரணியை அனுமதிப்பது தொடா்பாக மத்திய அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT