இந்தியா

ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்: சீரம் நிறுவனம்

DIN

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளாகக் கூடியவர்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
 தடுப்பூசியின் நன்மை, தீமைகள் குறித்து பயனாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்நிறுவனம் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியில் எல்-ஹிஸ்டிடைன், எல்-ஹிஸ்டிடைன் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசர்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டைசோடியம் எடிடேட் டைஹைட்ரேட், நீர் ஆகிய மூலப் பொருள்கள் கலந்துள்ளன.
 தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன், தாங்கள் ஏற்கெனவே மேற்கொண்டிருக்கும் மருத்துவ சிகிச்சை குறித்தும், எந்தவொரு மருந்து, உணவு, தடுப்பூசியால் தங்களுக்கு கடுமையான ஒவ்வாமை அல்லது எதிர்வினை ஏற்பட்டிருந்தால் அது குறித்தும் மருத்துவரிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
 தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன் காய்ச்சல், ரத்தக் கோளாறு பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மருந்து குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
 மேலும், கர்ப்பிணிகள், கர்ப்பமாகத் திட்டமிட்டுள்ளவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய்மார்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் இது குறித்து கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
 தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர், ஏற்கெனவே மற்றொரு கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தால் அது குறித்தும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 நாடு முழுவதும் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் தொடங்கியது. இதில் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை நாட்டில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் - பாரத் பயோடெக்
 ஹைதராபாத், ஜன.19: காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500-க்கும் மேற்பட்டோருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
 இத்தகைய சூழலில், கோவேக்ஸின் தடுப்பூசியைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வாமை கொண்டவர்கள், அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், ரத்தம் உறைதலில் குறைபாடுடையோர், உடலில் குறைந்த நோய்எதிர்ப்பு சக்தி உடையோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பாக உடல்நலம் சார்ந்த தகவல்களை அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்க வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அத்தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியை 4 வார இடைவெளியில் இரு முறை செலுத்திக் கொள்வது அவசியம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் அந்நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT