இந்தியா

நில ஆக்கிரமிப்பு புகாரை திரும்பப் பெறுக: விஸ்வபாரதி பல்கலை.க்கு அமார்த்திய சென் கடிதம்

DIN

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதன் வளாகத்தில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தனது குடும்பத்தினர் மீது கூறப்படும் புகாரை திரும்பப் பெறும்படி நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமார்த்திய சென் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 விஸ்வபாரதி மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள சாந்தி நிகேதன் வளாகத்தில் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் அமார்த்திய சென் உள்ளிட்ட தனிநபர்களால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க அரசுக்கு பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் அனுப்பப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் வகையில், அமார்த்திய சென் வீடு அமைந்துள்ள நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினர்.
 தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அமார்த்திய சென் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கெனவே மறுத்துள்ள நிலையில், விஸ்வபாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் வித்யுத் சக்கரவர்த்திக்கு கடந்த திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை நியாயப்படுத்த எந்த ஆவணத்தையும் பல்கலைக்கழக அதிகாரிகளால் அளிக்க முடியவில்லை. எங்கள் வீடு அமைந்துள்ள நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை பல்கலைக்கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுத்த நிலத்தைத் தவிர எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் எனது தந்தையால் பல்கலைக்கழகத்திடமிருந்து அல்லாமல் வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டது. அதற்கான பஞ்சாயத்து வரிகளை நான் பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன்.
 எண்பது ஆண்டு கால ஆவணத்தின் மீது திடீரென குற்றம்சாட்டுவது துன்புறுத்தலுக்கான குரூரமான முயற்சியாகும். குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை தவிர கூடுதல் நிலத்தைக் கண்டறிந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் அச்சுறுத்துவது விஷமத்தனமானது. எனவே, நில ஆக்கிரமிப்பு புகாரை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 நில விவகாரம் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னிடமோ, குடும்பத்தினரிடமோ எந்தப் புகாரும் அளிக்கவில்லை என ஏற்கெனவே சென் மறுத்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படுகிறார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பிரச்னையில் அமார்த்திய சென்னுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT