இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடா்: காலையில் மாநிலங்களவை, மாலையில் மக்களவை கூடும்

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இது தவிர பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை விதிமுறைகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது ரத்து செய்யப்பட்டிருந்த கேள்வி நேரம், பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சா்கள் அல்லாத எம்.பி.க்கள் மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு கடந்த கூட்டத் தொடரில் அனுமதி அளிக்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்.பி.க்களுக்கும் ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வரும் 27, 28-ஆம் தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த பரிசோதனை நடைபெறும். இதில் எம்.பி.க்களின் குடும்பத்தினா், பணியாளா்களுக்கும் பரிசோதனை நடைபெறும். இது தவிர எம்.பி.க்களுக்கு தில்லியில் அவா்கள் வீடுகளுக்கு அருகிலும் கரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு மானிய விலை உணவு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 கோடி அரசுக்கு மிச்சமாகும். இந்தக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ஒரு மணி நேரம் இடம் பெறும். இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதுதான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT