இந்தியா

இணைய தொடரில் ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு புகார்: இயக்குநர், அமேஸான் நிர்வாகி மீது வழக்குப் பதிவு

DIN


லக்னௌ/போபால்: அமேஸான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் "தாண்டவ்' என்ற ஹிந்தி இணைய தொடரில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக லக்னௌ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேஸான் உள்ளடக்கப் பிரிவின் தலைவர் அபர்ணா புரோஹித், வெப் தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, கதாசிரியர் கெüரவ் சோலங்கி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடித்துள்ள, அரசியல் கதைக்களம் கொண்ட இந்த வெப் தொடர் கடந்த 15-ஆம் தேதி அமேஸான் பிரைம் விடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தத் தொடரை ஒளிபரப்பத் தடை விதிக்கக் கோரி மும்பை வடகிழக்குத் தொகுதியின் பாஜக எம்.பி. மனோஜ் கோடக், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அமேஸான் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே இந்தத் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஷ்வாஸ் சாரங், சட்டப் பேரவையின் தற்காலிகத் தலைவர் ராமேஷ்வர் சர்மா ஆகியோர் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரின் கடவுள்கள் கேலி செய்யப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள விஷ்வாஸ் சாரங், ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருவதால் அதற்கும் தணிக்கைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஓடிடி தளங்களில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் தேவைப்படுவதாகக் கூறியுள்ள மத்திய பிரதேச சட்டப் பேரவையின் தற்காலிகத் தலைவர் ராமேஷ்வர் சர்மா, ஒவ்வொரு முறையும் ஹிந்து கடவுள்களே ஏன் கேலி செய்யப்படுகின்றன, மற்ற மதங்களின் கடவுள்கள் ஏன் கேலி செய்யப்படுவதில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைதி, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது சுட்டுரைப் பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, லக்னௌ நகரில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் வெப் தொடரின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மத உணர்வுகள் புண்படும்படியான வசனங்களுடன் ஹிந்து கடவுள்கள் கண்ணியக்குறைவாக காட்டப்பட்டதாகவும், பிரதமர் பதவியை வகிக்கும் நபர் தரக்குறைவாக சித்திரிக்கப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT