இந்தியா

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

19th Jan 2021 05:21 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள வங்கி மோசடிக் குற்றவாளியான விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதில் ராஜீய ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விளக்கம் அளித்தது.

கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர். இந்திய வங்கிகளில் பெற்ற ரூ. 9,000 கோடியைத் திரும்பச் செலுத்தாமல் தலைமறைவான இவர், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

பிரிட்டனில் 20196 மார்ச் முதல் அந்நாட்டு நீதிமன்றத்தின் கைதுத் தடையாணை உதவியுடன் மல்லையா வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தி அழைத்து வர இந்திய அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, மல்லையாவை நாடுகடத்தி அழைத்துவர மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது. 

ADVERTISEMENT

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, விஜய் மல்லையாவை பிரிட்டனிலிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்துவர மேலும் சிறிது காலம் தேவைப்படுவதாகவும், அதுதொடர்பாக விரிவான கள நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை வரும் மார்ச் 15-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

விசாரணையின்போது, மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி தேவேஷ் உத்தம் அளித்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் துஷார் மேத்தா தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:பிரிட்டனில் உள்ள பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தி அழைத்துவர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருநாட்டு அரசு நிர்வாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் தாமதம் ஏற்படுகிறது.

 பிரிட்டன் நீதித்துறை நடவடிக்கைகள் முழுமையடையாமல் மல்லையாவை நாடு கடத்த இயலாது என்றும், இதில் சில ரகசிய அம்சங்கள் இருப்பதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. மல்லையாவை நாடுகடத்த விரும்பும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை பிரிட்டன் உணர்ந்துள்ளதாகவும் விரைவில் இதில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடுகடத்தி அழைத்துவர இந்திய அரசு தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நமது வெளியுறவுச் செயலர் ஹர்ஷவர்த்தன் ஷ்ரிங்கலா பிரிட்டன் உள்துறைச் செயலர் பிரீத்தி படேலுடன் கடந்த நவம்பரில் பேச்சு நடத்தியுள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராபிடம் இதுபற்றி விரிவாக ஆலோசித்துள்ளார். இந்த ஜனவரி மாதம்கூட இந்திய உள்துறை செயலர் பிரிட்டன் உள்துறை அதிகாரியிடம் இதுதொடர்பாக நமது கவலைகளை எடுத்துக் கூறியுள்ளார். பிரிட்டனின் சட்ட நிலைப்பாட்டால் மல்லையாவை இந்தியா அழைத்துவர தாமதம் ஆகலாம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijay Mallya Problem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT