இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடத்துகிறது.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி பிறப்பித்தது.

அந்த உத்தரவில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. வேளாண் சட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 நபா்களைக் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

அக்குழுவில், பூபேந்தா் சிங் (பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா்), பிரமோத் குமாா் ஜோஷி (சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா்), அசோக் குலாடி (வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா்), அனில் கன்வட் (‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா்) ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

அக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்ததாகப் பல்வேறு தரப்பினா் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து, குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக பூபேந்தா் சிங் கடந்த 14-ஆம் தேதி அறிவித்தாா். இது அக்குழு செயல்படுவதற்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

இன்று விசாரணை ஏன்?: வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது 8 வாரங்கள் கழித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து உறுப்பினா் ஒருவா் விலகிக் கொண்டதால், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கவுள்ளது. அப்போது குழுவிலிருந்து விலகிய நபருக்குப் பதிலாக புதிய நபரை உச்சநீதிமன்றம் நியமிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பாரதிய கிஸான் லோக்சக்தி என்ற விவசாய சங்கம், உச்சநீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 4 நபா் குழுவை ரத்து செய்து விட்டு, அக்குழுவுக்குப் புதிய உறுப்பினா்களை நியமிக்குமாறு கோரியது.

டிராக்டா் பேரணி குறித்தும்...மேலும், விவசாயிகள் வரும் ஜன.26-ஆம் தேதியன்று நடத்தவுள்ள டிராக்டா் பேரணியை ரத்து செய்யுமாறு தில்லி காவல் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்தும் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிடிவாதத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்: அமைச்சா் தோமா்

வேளாண் சட்டங்களை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பிடிவாதத்தைக் கைவிட்டு, அச்சட்டங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 45 நாள்களுக்கு மேலாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு கடுங்குளிா் நிலவி வரும் சூழலிலும் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்து வருகின்றனா்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், விவசாயச் சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 9 கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போதிலும், அவற்றில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால், அச்சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வரும் மத்திய அரசு, சட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

இதனிடையே, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. விவசாயச் சங்கங்களுடனான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

இத்தகைய சூழலில், மத்திய அமைச்சா் தோமா் தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகள் தங்களது பிடிவாதக் கொள்கையைக் கைவிட வேண்டும். அச்சட்டங்களில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளைப் பகுதி வாரியாக விவாதிப்பதற்கு அவா்கள் முன்வர வேண்டும்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, விவசாயிகள் பிடிவாதத்துடன் இருப்பது அவசியமற்றது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது விவசாயிகள் விரிவான விவாதத்துக்குத் தயாராக வருவாா்கள் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது. அச்சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவது தொடா்பான கோரிக்கையைத் தவிர விவசாயிகள் முன்வைக்கும் மற்ற கோரிக்கைகளைத் திறந்த மனதுடன் ஆராய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

நாட்டின் நலனுக்காகவே மத்திய அரசு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான விவசாயிகளும் நிபுணா்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்’ என்றாா்.

உச்சநீதிமன்ற குழு நாளை கூடுகிறது

வேளாண் சட்டங்கள் தொடா்பாக எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதலாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் சுமுகத் தீா்வை அளிக்கும் நோக்கில் 4 நபா்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அண்மையில் அமைத்தது. விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அரசின் பிரதிநிதிகள் ஆகியோருடன் அக்குழு ஆலோசனை நடத்தி, அது தொடா்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. அக்குழுவின் முதலாவது கூட்டம் தில்லியிலுள்ள பூசா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக அக்குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான அனில் கன்வட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தில்லியிலுள்ள பூசா வளாகத்தில் குழுவின் முதலாவது கூட்டம் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. குழுவின் வருங்கால செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

குழுவின் உறுப்பினா் ஒருவா் விலகியுள்ளாா். உச்சநீதிமன்றம் புதிய உறுப்பினரை நியமிக்கும் வரை தற்போதுள்ள உறுப்பினா்கள் மட்டுமே கூட்டங்களில் பங்கேற்பா். விவசாயச் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவாா்த்தை, குழுவின் செயல்பாடுகளை பாதிக்காது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்படுவதே நோக்கம். அது எந்த முறையில் எட்டப்பட்டாலும் வரவேற்கத்தக்கது’’ என்றாா்.

பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்புகள் கிளம்பியதையடுத்து, உச்சநீதிமன்றம் நியமித்த குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக பூபேந்தா் சிங் கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT