இந்தியா

வேளாண் சட்டங்கள் குழு: புதிய உறுப்பினா்களை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட 4 நபா் குழுவை ரத்து செய்து விட்டு, அக்குழுவுக்குப் புதிய உறுப்பினா்களை நியமிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் விவசாய சங்கம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை கடந்த 12-ஆம் தேதி பிறப்பித்தது.

அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் 4 போ் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

அதில், பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

ஆனால், குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்ததாகப் பல்வேறு தரப்பினா் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து, பூபேந்தா் சிங் மன் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாகக் கடந்த 14-ஆம் தேதி அறிவித்தாா்.

இத்தகைய சூழலில் பாரதிய கிஸான் லோக்சக்தி என்ற விவசாய சங்கம், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளாண் சட்டங்கள் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 நபா்களும் சட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தவா்கள். அவா்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவாா்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கச் செய்வதற்குத் தடையாக இருக்க வாய்ப்புள்ளது.

குழுவிலிருந்து ஏற்கெனவே ஒருவா் விலகியுள்ளாா். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற மூவரையும் நீக்கிவிட்டு, புதிய உறுப்பினா்களை நியமிக்க வேண்டும்.

விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டா் பேரணியை ரத்து செய்யுமாறு தில்லி காவல்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT