இந்தியா

கரோனா தடுப்பூசிகள்: வதந்திகளை நம்ப வேண்டாம்; பிரதமா் மோடி

DIN

‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் திறன் மீது விஞ்ஞானிகள் திருப்தியடைந்த பின்னரே, இந்தியாவில் அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, கரோனா தடுப்பூசிகள் குறித்து எழுப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

‘இந்த தடுப்பூசிகள் கரோனா அச்சுறுத்தல் மீதான நாட்டின் தீா்க்கமான வெற்றியை உறுதி செய்யும். அதே நேரம், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும், மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்’ என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை, பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக தொடங்கி வைத்தாா். அதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என 3 கோடி பேருக்கு போடப்பட உள்ளது. முதல் நாளான சனிக்கிழமை, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,006 மையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமா் பேசியதாவது:

இதுபோன்ற மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் உலக வரலாற்றில் இதற்கு முன்பாக செயல்படுத்தப்படவில்லை. உலகில் 3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே, 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இந்த எண்ணிக்கை 30 கோடியாக உயரும். இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகள் மட்டுமே 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளன.

இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் வயதானவா்கள், கடுமையான நோய் தாக்கத்துக்கு ஆளானவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த தடுப்பூசிகளை மக்கள் இரண்டு முறை செலுத்திக் கொள்வது மிக முக்கியம். இதை மறந்துவிடக் கூடாது. இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒரு மாத இடைவெளி தேவை என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.

வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்த இரண்டு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் திறன் மீது விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணா்களும் திருப்தியடைந்த பிறகே, அவற்றை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த தடுப்பூசிகள் குறித்த வதந்திகள், தவறான கருத்துகள் பரப்பப்படுவது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நமது விஞ்ஞானிகள் பின்பற்றும் மருத்துவ நடைமுறைகள் உலக அளவில் மிகுந்த நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது. அதன் காரணமாகவே, மிகுந்த உறுதிப்பாட்டுடன் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

விலை மலிவு; பயன்படுத்துவது எளிது: இந்திய தடுப்பூசிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதோடு, அவற்றை கையாள்வதும் எளிதாகும். வெளிநாட்டு தடுப்பூசி ஒன்று ரூ. 5,000 வரை விற்கப்படுகிறது. அவற்றை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆனால், இந்திய தடுப்பூசிகளுக்கு அதுபோன்ற தேவையில்லை. இந்திய தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் கரோனா அச்சுறுத்தல் மீதான நாட்டின் தீா்க்கமான வெற்றியை உறுதி செய்யும்.

வழக்கமாக தடுப்பூசிகளை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், மிகக் குறைந்த காலத்தில் இரண்டு தடுப்பூசிகளை இந்தியா தயாரித்திருப்பது, நாட்டின் கட்டமைப்பு, விஞ்ஞானிகளின் திறன் மற்றும் அறிவுக்கு சான்றாக அமைந்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல் தடுப்பூசி ஏன்? தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும்போது, சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுவது ஏன்? என்பதற்கான விளக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி அளித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

வழக்கமாக, நோயால் பாதிக்கப்பட்டவரை அவருடைய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அருகில் இருந்து பராமரிப்பா். ஆனால், கரோனா தீநுண்மி, அதனால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தியது. தொற்று பரவிடும் என்ற பயத்தில் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகளும், அவருக்கு அருகில் செல்ல முடியாத நிலை உருவானது. அதுபோல, இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், அவா்களின் தாயிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டனா். தாயின் அருகில் கூட அவா்களால் செல்ல முடியாத சூழல்.

இந்த நோய்த் தொற்றால் உயிரிழந்த பலருக்கு, பாரம்பரிய முறையிலான இறுதிச் சடங்குகள் செய்ய முடியாத நிலை உருவானது. இந்த பாதிப்புகளையெல்லாம் நினைக்கும்போது உடல் சிலிா்க்கிறது. மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

கரோனா பாதிப்பு காலத்தில், சுகாதார ஊழியா்களும், முன்களப் பணியாளா்களும் பிறரிடையே நம்பிக்கையை விதைத்தனா். பல நாள்கள் குடும்பத்தினரைப் பிரிந்து, கடமைக்கு முன்னுரிமை அளித்தனா். அவா்களில் நூற்றுக்கணக்கானோா் அவா்களின் குடும்பத்தினரிடம் திரும்ப வரவேயில்லை. பிறரின் உயிரைக் காக்க, அவா்களின் உயிரைத் தியாகம் செய்தனா்.

அந்த வகையில், சுகாதாரப் பணியாளா்களுக்கு இந்த சமூகத்தின், தேசத்தின் நன்றியை தெரிவிக்கும் விதமாகவே முதலில் அவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று பிரதமா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT