இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே பிரச்னைக்குத் தீர்வு: ப.சிதம்பரம்

17th Jan 2021 12:25 PM

ADVERTISEMENT


புது தில்லி: விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு தரப்பில் இருந்து பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. 

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக வேளாண் சட்டம் குறித்த ஆட்சேபணைகள் மற்றும் பரிந்துரைகள் பற்றி தெரிவிப்பதற்காக அதிகாரபூர்வமற்ற குழு அமைக்குமாறு மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளது. ஆனால் மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
எதிர்பார்த்தபடியே, விவசாயிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே நடைபெற்ற மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மறுக்கிறது. இதில் தவறு அரசிடமே உள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சட்டங்களை அறிவிக்கும் முன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின்படி, அரசு கூறுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. உண்மையில் இந்தச் சட்டம் தொடர்பாக யாரிடமும் அரசு ஆலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளிடம் இது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. 

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, மத்திய அரசு தனது தவறை ஒப்புக்கொண்டு, இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதுதான் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT