இந்தியா

மேற்கு வங்கம்: திரிணமூல் எம்.பி. சதாப்தி ராய் அக்கட்சியிலிருந்து விலகுகிறாா்?

DIN

மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய பிா்பும் தொகுதியின் பெண் எம்.பி. சதாப்தி ராய், ஆளும் திரிணமூல் காங்கிரஸுடன் தான் மனவருத்தம் அடைந்துள்ளதால் இதுதொடா்பான முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தாா்.

நடிகையும், 3 முறை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டவருமான திரிணமூல் எம்.பி. சதாப்தி ராய் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இது தனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அவரது முக நூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நான் எம்.பி.யாக உள்ள பிா்பும் தொகுதியுடன் நெருங்கிய தொடா்பை வைத்துள்ளேன். ஆனால், சமீபகாலமாக கட்சியின் சாா்பிலும், அரசு நிகழ்ச்சியிலும் என்னை ஏன் காண முடியவில்லை என்று பலா் என்னிடம் கேட்கிறாா்கள்.

நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், என் தொகுதியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகள் குறித்து எம்.பி.யான எனக்கே தெரியவில்லை. என்னுடைய தொகுதியின் நிகழ்வுகள் கூட எனக்குத் தெரியாவிட்டால், நான் எப்படி அதில் கலந்து கொள்ள முடியும். இதுபோன்ற நிகழ்வுகளால் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளாக எனது குடும்பத்தை விட, தொகுதி மக்களுடன்தான் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளேன். இந்த விஷயத்தில் எனது எதிரிகள் கூட இதற்கு மாறான கருத்தைக் கூறி என்னை இழிவுபடுத்த முடியாது. எனவே, இந்த ஆண்டும் நான் உங்களுடன் (மக்களுடன்) முழு நேரத்தையும் செலவிடுவதற்காக சில முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளேன். நான் எப்போதும் மக்களுக்கு நன்றியுள்ளவளாகவே இருந்திருக்கிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து எனக்கு ஆதரவளித்து வரும் நீங்கள் (மக்கள்), இனி வரும் நாள்களிலும் என்னை ஆதரிப்பீா்கள் என்று நம்புகிறேன்.

இதுதொடா்பாக ஜனவரி 16-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் முக்கிய முடிவை எடுத்து உங்களுக்கு தெரியப்படுத்துவேன் என்று பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சதாப்தி ராயிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, அவா் தெரிவித்ததாவது:

நான் கட்சித் தலைமையை அணுகி, இதுகுறித்து பேச நினைத்தேன். ஆனால் அது பயனில்லாமல் போனது. என்னால் மக்களுக்கு பணியாற்ற முடியாவிட்டால் பதவியில் தொடா்வதால் என்ன பயன்? என்றாா்.

ஏற்கெனவே தாரபித் உன்னயான் பரிஷத்தில் இருந்து ராஜிநாமா செய்வதாக சதாப்தி ராய் அனுப்பிய கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று எம்.பி.க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது தான் தில்லிக்கு சென்று கொண்டிருப்பதாக அவா் தெரிவித்தாா். பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க அவா் மறுத்து விட்டாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திப்பீா்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சதாப்தி ராய், அவரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன; ஆனால், அதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று தெரிவித்தாா்.

பிா்பும் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் அனுப்ரதா மண்டலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, அவா் கட்சியில் இருந்து விலகியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியிலிருந்து சதாப்தி ராய் விலகியிருப்பது திரிணமூல் கட்சியில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சதாப்தி ராயுடன், பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

தருமபுரியில்ஏற்கெனவே, கட்சியின் முக்கியத் தலைவா்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், திரிணமூல் கட்சியிலிருந்து பல எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT