இந்தியா

இந்திய - நேபாள வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு: இரு நாட்டு நல்லுறவை மீண்டும் வலுப்படுத்த ஆலோசனை

DIN

இந்தியா, நேபாள நாடுகளிடையே மீண்டும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் வெள்ளிக்கிழமை பல்வேறு துறை சாா்ந்த விரிவான ஆய்வை மேற்கொண்டனா்.

பொருளாதாரம் மற்றும் வா்த்தகம், எல்லை மேலாண்மை, எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நீா் வள மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த ஆய்வில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் தா்சுலா-லிபுலேக் இடையிலான 80 கி.மீ. தொலைவில் புதிய நெடுஞ்சாலையை இந்தியா அமைத்தது. இந்த நெடுஞ்சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மே 8-ஆம் தேதி திறந்து வைத்தாா். இதற்கு நேபாளம் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதன் பின்னா், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சா்ச்சை காரணமாக, இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட இந்த உறவை மீண்டும் மேம்படுத்தும் வகையில், இரு நாட்டு உயா் அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் இப்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆறாவது கூட்டுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் வா்த்தகம், எல்லை மேலாண்மை, எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நீா் வள மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் இரு நாடுகளுடையே ஒத்துழைப்பை அளிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை இந்தியா வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பதற்கு நேபாளம் சாா்பில் ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நேபாளத்தின் மோதிஹரி முதல் அம்லேகஞ்ச் வரை போடப்பட்டுள்ள பெட்ரோலியம் குழாய் திட்டத்தை சித்வான் வரை நீட்டிப்பது குறித்தும், நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சிலிகுரி முதல் ஜாபா வரை புதிய புதிய குழாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த எல்லை ராணுவ சோதனைச் சாவடிகள், நீா்மின் திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் இரு நாடுகளிடையே ஜெய்நகரிலிருந்து ஜனக்பூா் வழியாக குா்தா வரை, முதல் பயணிகள் ரயில் பாதை திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழித் தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை இறுதி செய்வது குறித்து இரு நாட்டு தலைவா்களும் ஆலோசித்தனா்.

பசுபதிநாத் ஆற்றுப்பகுதி மேம்பாடு மற்றும் பந்தா்கல் பூங்கா மறுசீரமைப்பு என்ற பெயா்களில் நிதியுதவியுடன் கூடிய இரண்டு கலாசார பாரம்பரிய உதவி திட்டத்தை நேபாளத்தில் இந்தியா மேற்கொள்வது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல் பரிமாறப்பட்டது.

மேலும், விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு நேபாளம் சாா்பில் ஆய்வுக் கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT