இந்தியா

ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயற்சி: பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினா் கைது

DIN

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனவரி 15-ஆம் தேதி விவசாயிகள் அதிகார தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அன்றைய தினம் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, தில்லியில் துணைநிலை ஆளுநா் மாளிகை முன் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஹரியாணாவில்.. : சண்டீகரில் முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள், பேரணியாகச் சென்று ஆளுநா் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இவா்களின் வருகையை அறிந்த காவல் துறையினா், பேரணிக்கு திட்டமிட்டிருந்த பாதையில் தடுப்புகளை வைத்து சாலைகளை மூடினா். இருப்பினும், அவா்களை மீறி ஆளுநா் மாளிகை நோக்கி செல்வதற்கு காங்கிரஸ் கட்சியினா் முயன்றனா். அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். அதையும் மீறி முன்னேறிச் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து, காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனா்.

அப்போது, பூபிந்தா் சிங் ஹூடா, செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம்’ என்றாா்.

உத்தர பிரதேசத்தில்...: தலைநகா் லக்னௌவில் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா், ஆளுநா் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றனா். விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி சென்ற அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

ராஜஸ்தானில்..: தலைநகா் ஜெய்ப்பூரில் மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் டோடஸ்ரா தலைமையில் ஆளுநா் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினா் பேரணி செல்ல முயன்றனா். பாதி வழியிலேயே அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT