இந்தியா

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 555.83 லட்சம் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு

15th Jan 2021 01:24 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவலில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளம், மேற்கு வங்கம், அசாம், கர்நாடகம் மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு 2021 ஜனவரி 13 வரை 555.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 436.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 27.44 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு காரீப் சந்தை காலத்தில் 76.92 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 104942.40 கோடி பெற்றுள்ளனர். மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

2021 ஜனவரி 13 வரை, 290547.45 மெட்ரிக் டன்கள் பாசிப்பருப்பு, உளுந்து வேர்க்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை ரூபாய் 1554.57 கோடிக்கு தனது முகமைகள் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ள காரணத்தினால், தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள 1,54,546 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 

Tags : central govt
ADVERTISEMENT
ADVERTISEMENT