நாடு முழுவதும் நாளை (ஜன.16) முதல் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் நாளை தொடங்கப்படவுள்ளது.
அதனையொட்டி மாநில சுகாதாரத்துறையினர் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தயார் நிலையில் உள்ளனர். மாநிலத்தில் உள்ள மருத்துவகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்காக கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 5 நபர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 100 நபர்கள் வீதம் பதிவு செய்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று சத்தீஸ்கர், அசாம், ஹரியாணா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
சத்தீஸ்கரில் வழங்கப்பட்டுள்ள 3.23 லட்சம் கரோனா தடுப்பூசிக்கு இதுவரை 2.67 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.