இந்தியா

வாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

13th Jan 2021 03:49 AM

ADVERTISEMENT

ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியான வாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
 இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
 ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் விளங்குகிறது. வேரோடு அழிக்கப்பட வேண்டிய சவால்களில் அதுவும் ஒன்று. வம்சத்தின் காரணமாக அரசியலில் வளர்ந்தவர்கள், தங்களின் முந்தைய தலைமுறையினர் ஊழலுக்கு காரணமில்லை என நம்புகின்றனர். இதனால் அவர்களுக்கு சட்டத்தின் மீது மரியாதையோ பயமோ
 இருப்பதில்லை.
 குடும்ப பெயர்களின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு இப்போது அதிர்ஷ்டம் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். இப்போது நேர்மை, செயல்பாட்டுக்கு மக்கள் ஆதரவு அளித்தாலும், வாரிசு அரசியல் நோய் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இப்போதும் தங்களது குடும்ப அரசியலையும், அரசியலில் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும், அதை ஓர் இலக்காகக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். வாரிசு அரசியல் ஜனநாயகத்தில் புதிய வடிவிலான சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கிறது. இயலாமை காரணமாக நாட்டுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. தேசம் முதலில் என்பதற்குப் பதிலாக நான், எனது குடும்பம் என்ற உணர்வை மட்டுமே வாரிசு அரசியல் வலுப்படுத்துகிறது.
 இருப்பினும், அரசியலை வன்முறை, ஊழல் மற்றும் கொள்ளையுடன் தொடர்புபடுத்தி, அதை மாற்ற முடியாது என மக்கள் நினைத்த காலம் மாறிவிட்டது. இப்போது மக்கள் விழிப்புணர்வு பெற்று அரசியலில் நேர்மையானவர்களுடன் நிற்கிறார்கள், அவர்களுக்கு ஒரு வாய்ப்பையும் வழங்குகிறார்கள். இன்றைய அரசியலின் முதல் அவசிய தேவை என்பது நேர்மையாகவும், செயல்திறன் மிக்கவராகவும் இருப்பதுதான். நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால் இது நிகழ்ந்துள்ளது. இன்னும் சில மாற்றங்கள் தேவை. அதற்கு முன்னர் வாரிசு அரசியல்தான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை முக்கியத்துவப்படுத்த வேண்டும்.
 இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். பிற துறைகளைப் போலவே இளைஞர்களின் புதிய சிந்தனைகள், ஆற்றல், யோசனைகள், கனவுகள் ஆகியவை அரசியலுக்கும் தேவை. இளைஞர்கள் வராத வரையில் வாரிசு அரசியலின் நச்சு ஜனநாயகத்தை தொடர்ந்து பலவீனப்படுத்தும் என்றார் அவர்.
 பிரதமர் தனது உரையில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார். இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 விழாவில் தேசிய அளவில் வெற்றி பெற்ற 3 பேரின் உரை ஒளிபரப்பப்பட்டது. அவர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்களது உரையையும், இறுதிச் சுற்றில் பங்கேற்ற பிற போட்டியாளர்களின் உரையையும் தனது சுட்டுரையில் இணைப்பதாகத் தெரிவித்தார்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT