கேரளத்தில் கரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நாளொன்றுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கேரளத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தொற்று பரவல் குறைந்துவரும் விகிதத்திற்கு ஏற்ப தளர்வுகளை அவ்வபோது மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அந்தவகையில் திரையரங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று முதல் கேரளத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 500 திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் நாளொன்றுக்கு 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கேரளத்தில் 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல் நெறிமுறகளை கடைபிடிக்க மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.