இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் கூட்டணி உடையும்: ஹரியாணாவில் செளதாலா கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மிரட்டல்

13th Jan 2021 03:46 AM

ADVERTISEMENT

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் ஹரியாணாவில் ஆட்சியிலுள்ள பாஜக- ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி.) கூட்டணி உடையும் என்று ஜே.ஜே.பி. எம்எல்ஏக்கள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஜே.ஜே.பி. எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
 90 இடங்கள் கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் 40 இடங்களைக் கொண்டுள்ள பாஜக, ஜே.ஜே.பி.யின் 10 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டர் முதல்வராகவும், ஜே.ஜே.பி. கட்சித் தலைவர் துஷ்யந்த் செளதாலா துணை முதல்வராகவும் உள்ளனர்.
 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தங்கள் மாநில விவசாயிகளிடையே எதிர்ப்புப் பெருகியதால், இச்சட்டங்களை வாபஸ் வாங்குமாறு துஷ்யந்த் செளதாலா பாஜக தலைவர்களிடம் வலியுறுத்தி வந்தார். இதனிடையே, ஜே.ஜே.பி. எம்எல்ஏ ஜோகிராம் சிஹாக் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடம் நிலவும் எதிர்ப்பால் ஹரியாணா மாநிலத்தில் கூட்டணிக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இந்தச் சட்டங்களை உடனே வாபஸ் வாங்காவிட்டால் கூட்டணி உடையும் வாய்ப்புள்ளது.
 ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு காணப்படுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷாவிடம் துஷ்யந்த் செளதாலா விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும். எங்கள் கவலைகளை அவர் பாஜக தலைவர்களிடம் விளக்க வேண்டும் என்றார்.
 மற்றொரு ஜே.ஜே.பி. எம்எல்ஏவான ராம் குமார் கெளதம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே தீர்வு. இதுதொடர்பாக ஹரியாணா விவசாயிகளின் மனநிலை எதிராக இருப்பதால், தில்லியில் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றார்.
 தனது கட்சியில் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களால் மாநிலத்தில் ஆட்சி கவிழ்வதைத் தடுக்க, கட்சி எம்எல்ஏக்கள் 10 பேரையும் தில்லி வருமாறு துஷ்யந்த் செளதாலா அழைத்துள்ளார். அவர்களுடன் சென்று அமித் ஷாவை நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 கர்னால் பேரவைத் தொகுதியில் இரு தினங்களுக்கு முன் முதல்வர் கட்டர் கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்ட மேடையை விவசாயிகள் சங்கத்தினர் சேதப்படுத்தியதால் அந்நிகழ்ச்சி ரத்தானது. ஹரியாணா அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த சுயேச்சை எம்எல்ஏ சோம்வீர் சங்வான் கடந்த வாரம் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதும்
 குறிப்பிடத்தக்கது.
 "ஹரியாணா அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை'
 புது தில்லி, ஜன.12: ஹரியாணா அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அந்த மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்தார்.
 தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், ஹரியாணாவில் ஆட்சியமைத்துள்ள பாஜக-ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று ஜே.ஜே.பி. எம்எல்ஏக்கள் சிலர் மிரட்டல் விடுத்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து துஷ்யந்த் சௌதாலா கூறுகையில், "ஹரியாணாவில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அமித் ஷாவுடன் விவாதிக்கப்பட்டது. ஹரியாணா அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை பாஜக-ஜே.ஜே.பி. கூட்டணி அரசு முழுமையாக நிறைவு செய்யும்' என்று தெரிவித்தார்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT