இந்தியா

பாகிஸ்தான்-சீனா கூட்டு அச்சுறுத்தலை சாதாரணமாக விட்டுவிட இயலாது: ராணுவ தலைமைத் தளபதி நரவணே

13th Jan 2021 03:44 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாக விடுக்கும் மறைமுக அச்சுறுத்தலை சாதாரணமாக விட்டுவிட இயலாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்தார்.
 மேலும், "இந்தியாவின் வடக்கு எல்லையான கிழக்கு லடாக் நிலைப்பாட்டில் சீனாவுடன் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்; அதே சமயத்தில் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க இந்திய துருப்புகள் தயாராக உள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 நாட்டின் மேற்கு, வடக்கு எல்லைகளின் ஒட்டுமொத்த தேசியப் பாதுகாப்பு சவால்களில், பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை நோக்கி கூட்டு அணுகுமுறை மேற்கொள்வது வெளிப்படுகிறது. ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத துறைகளில் பாகிஸ்தான் - சீனா இடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருக்கிறது. இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக விட்டுவிட இயலாது. இதை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பதையே பாகிஸ்தான் தனது கொள்கையாக வைத்துள்ளது. பாகிஸ்தான் மூலமான இந்த அச்சுறுத்தலை இந்தியா தொடர்ந்து எதிர்கொள்ளும். இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் தூண்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம்.
 படைக்குறைப்பு இல்லை: வடக்கு எல்லையான லடாக் பகுதியில் இந்திய ராணுவம் சீனாவின் சவாலைச் சந்திக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. பொதுவாக சீனப்படைகள் தங்கள் பயிற்சிகளுக்காக எல்லைப் பகுதிகளுக்கு வருவதுண்டு. பின்னர் திரும்பிச் செல்வதுண்டு. ஆனால், இந்த முறை திரும்பிச் செல்லாமல் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
 இந்தியா - சீனா இடையே நிலவும் மோதல் போக்குகள் கைவிடப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறேன். இரு தரப்பு பரஸ்பர, சமமான பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று நம்புகின்றேன். இந்த நிலை எட்டப்படும் வரை கிழக்கு லடாக்கில் படைக் குறைப்பு இருக்காது. லடாக்கில் மட்டுமல்லாமல், நடைமுறை கட்டுப்பாட்டு கோட்டில் முழுமையாக இந்திய துருப்புக்கள் உயர் அளவில் விழிப்புணர்வுடனே இருப்பார்கள்.
 கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையே எட்டப்பட்ட முடிவின்படி, படைக் குறைப்பு உள்ளிட்ட ஐந்து அம்ச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளைக் காண இந்தியா - சீன ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடைசியாக கடந்த நவம்பர் 6 -ஆம் தேதி எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 9 -ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
 மீனவர்கள் துன்புறுத்தலை ஏற்க முடியாது: இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை ராணுவம் அணுக வேண்டும். நமது மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியப் பகுதிகளை இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் பாதுகாக்கின்றன.
 இருப்பினும், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ரீதியான பேச்சு வார்த்தையின் போது எடுத்துக் கொள்ளப்படும் என்றார் நரவணே.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT