இந்தியா

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை பெயிண்ட்: அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துவைத்தார்

13th Jan 2021 03:40 AM

ADVERTISEMENT

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட காதி இயற்கை பெயிண்டை மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
 சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மை இல்லாத, பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்ட பெயிண்டை காதி, கிராமத் தொழில் ஆணையம் (கேவிஐசி) தயாரித்துள்ளது. இதை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துவைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காதி, கிராமத் தொழில் ஆணையம் தயாரித்துள்ள இயற்கை பெயிண்ட் போன்ற பொருள்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் மூலம் தற்சார்பு இந்தியா உருவாகும்.
 அதேநேரம், கிராமப்புற பொருளாதாரம் பலப்படுத்தப்படுவதுடன் பசுக்களும் பாதுகாக்கப்படும். மணமற்ற இந்த பெயிண்ட், சாணத்தை முக்கிய மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. காரீயம், பாதரசம், குரோமியம், ஆர்சனிக், காட்மியம் போன்ற உலோகங்கள் இல்லாத வகையில் இந்த பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
 குறைந்த விலையில் தயாரிக்கக் கூடிய இந்த பெயிண்டுக்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த பெயிண்ட் தற்போது டிஸ்டெம்பர், பிளாஸ்டிக் எமல்ஷன் என்ற இரண்டு வகைகளில் விற்பனைக்கு வருகிறது.
 பெயிண்ட் சந்தையில் தற்போது ஒரு லிட்டர் பெயிண்ட் ரூ.550 வரை விற்பனையாகி வரும் நிலையில், இயற்கை பெயிண்ட் ஒரு லிட்டர் ரூ.225க்கு கிடைக்கும். எதிர்காலத்தில் காதி இயற்கை பெயிண்டின் சந்தை மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடியாக உயரும்.
 இயற்கை பெயிண்ட் தயாரிப்பு திட்டமானது காதி, கிராமத் தொழில் ஆணையத்தின் ஆண்டு விற்றுகொள்முதலை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தும். இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வெகுவாக உயரும்.
 சாணம் மூலப்பொருளாக இருப்பதால் பால் கறக்காத மாடாக இருந்தாலும் இனி அது பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு மாட்டில் இருந்தும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்பதால், பொருளாதார முக்கியத்துவத்தைக் கருதி பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவது குறையும்.
 மேலும், உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன், தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான வேலைவாய்ப்பும் உருவாகும். சமூக, பொருளாதார, கல்வியில் பின்தங்கிய பகுதிகளை இத்திட்டம் மேம்படுத்தும் என்பதால், அங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மக்கள் இடம் பெயருவது தடுக்கப்படும்.
 நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நாட்டு மாடுகளை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் உள்ள 10 ஆயிரம் கால்நடை மருத்துவமனைகளுக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் நிதியுதவி அளிக்கும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT