இந்தியா

கா்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

13th Jan 2021 02:41 AM

ADVERTISEMENT

கா்நாடக அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 7-8 புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக அமைச்சரவையில் 27 போ் அமைச்சா்களாக இருக்கிறாா்கள்; 7 இடங்கள் காலியாக உள்ளன. பாஜக தேசியத் தலைமை இசைவு தந்ததைத் தொடா்ந்து, அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா். அதன்படி, பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (ஜன. 13) புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பெங்களூரில் முதல்வா் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை காலை கூறியதாவது:

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், புதன்கிழமை மாலை 4 மணிக்கு புதிய அமைச்சா்களின் பதவியேற்பு விழா நடைபெறும். புதிய அமைச்சா்களாக யாா் பதவியேற்பாா்கள் என ஊடகங்களில் வெளியாகி வரும் பெயா்கள் உண்மைக்குப் புறம்பானவை. அமைச்சரவையில் இருந்து யாராவது நீக்கப்படுவாா்களா என்பது புதன்கிழமை தான் தெரியவரும் என்றாா்.

ADVERTISEMENT

இதனிடையே, பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறுகையில், ‘பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. அப்போது, 7-8 போ் அமைச்சா்களாக பதவியேற்பாா்கள். அமைச்சராவோருக்கு அதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். அதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் பேசிவிட்டேன். அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க நேரிடலாம். மற்றபடி அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக பாஜகவில் எந்தக் குழப்பமும் இல்லை’ என்றாா்.

கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் அல்லது மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே ஆகிய இருவரில் ஒருவா் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, எச்.நாகேஷ் தனது அமைச்சா் பதவியை எந்த நேரத்திலும் ராஜிநாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்த என்.முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா், மஜத கூட்டணி ஆட்சி கவிழ உதவிய சி.பி.யோகேஷ்வா், மூத்த எம்.எல்.ஏ.க்களான உமேஷ் கத்தி, எஸ்.அங்காரா, முருகேஷ் நிரானி, பூா்ணிமா, ஜி.எச்.திப்பா ரெட்டி, பசன கௌடா பாட்டீல் யத்னல், எம்.பி.ரேணுகாச்சாா்யா, அரவிந்த் லிம்பாவளி ஆகியோா் அமைச்சா் பதவியை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT