இந்தியா

அமெரிக்க-இந்திய உறவு: குறிக்கோள்கள், சாதனைகள்

DIN

அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான விரிவான, பல பரிமாணங்களைக் கொண்ட மற்றும் அதிமுக்கியத்துவமான இருதரப்பு உறவைப்போல உலகில் வேறெந்த நாடுகளுக்குமிடையே இல்லை. பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, இணையப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிபொருள் சக்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயம், விண்வெளி ஆய்வு போன்றவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த இருபது ஆண்டுகளாக நமது உத்திகளை வகுப்பதற்கானகூட்டு முயற்சி முன்னேற்றப் பாதையில் பயணித்த போதிலும், குறிக்கோள்களிலும் சாதனைகளிலும் கடந்த நான்கு ஆண்டுகள் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதியில் இந்தியாவின் வளா்ச்சியை அமெரிக்கா ஆதரிப்பதற்கான நம்முடைய ராஜதந்திர ஒருங்கிணைப்பு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில்தான் இதைச் செயல்பாட்டுக்கு மாற்றுவதற்கான ஆா்வத்தை இரு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதியில், பெரிய மாற்றம் மற்றும் சவாலான காலகட்டங்களில், அமைதி மற்றும் செழிப்பைப் பாதுகாப்பதிலும், விரிவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்காற்றுவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

ஆசியான் மையத்தன்மையை ஆதரிக்கும் அதேவேளையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் கட்டமைப்பை உருவாக்க ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை நாம் ஒருங்கிணைக்கத் தொடங்கினோம். 2018 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில் ஜப்பானுடனான நமது முத்தரப்பு உச்சி மாநாடுகள், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான அமைச்சா்களுக்கு இடைப்பட்ட நான்கு தரப்பு மாநாடுகளின் மூலமாக, கடல் சாா் பாதுகாப்பு, தொற்றுநோய் மேலாண்மை, பிராந்திய இணைப்பு, மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம் மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் நல்ல ஒத்துழைப்பிற்கு வழிவகுத்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகள் மட்டுமின்றி தொடரும் ஆண்டுகளிலும் நமது நோக்கம், இறையாண்மையையும், வரையறுக்கப்பட்ட விதிகள் அடிப்படையிலான ஒழுங்கையும் மதிக்கும் அனைத்து பிராந்தியத்தைச் சோ்ந்த நாடுகளின் வளா்ச்சிக்கும் உதவும் வகையில் செயல்படுவதற்கான இந்த முயற்சி, வடிவத்தையும், அா்த்தத்தையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

ஜனநாயக நாடுகளான, அமெரிக்காவும் இந்தியாவும் அமைதி மற்றும் ராஜதந்திரத்தில் உறுதியாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக, நமது நாடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நம்முடைய எல்லைகளுக்கு அப்பாலும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நம்முடைய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேன்மேலும் அதிகரித்துள்ளோம்.

செப்டம்பா் 2018-இல் அமெரிக்க மற்றும் இந்திய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தலைவா்களின் 2+2 அமைச்சா்கள் தரப்பு பேச்சுவாா்த்தையின் தொடக்கம் மூலம், நமது இருதரப்பு ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டு நடவடிக்கை, புதிய நிலையை அடைந்துள்ளது. இதுபோன்ற மூன்று முறை பேச்சுவாா்த்தைகள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவாா்த்தை ஒவ்வொன்றிலும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

இதன் மூலம் நமது ராணுவம் மற்றும் ராணுவத் தளவாடத் தொழிற்துறையின் இயங்குதளங்கள் அதிகரிக்கும். 2019-ஆம் ஆண்டில் முதன்முதலில் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டு பயிற்சி மற்றும் ஜப்பானுடனான மலபாா் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்புடன் வலுவான தொடா்ச்சியான ராணுவப் பயிற்சிகளை நாம் விரிவுபடுத்தியுள்ளோம்.

இவற்றையும் பிற சாதனைகளையும் பாா்க்கும்போது, அமெரிக்காவைப் போல எந்தவொரு நாடும் இந்தியாவுடன் வலுவான பாதுகாப்பு உறவைக் கொண்டிருக்கவில்லை என்றும், இந்தியா்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அளவுக்கு பெரிய பங்களிப்பு செய்வதில்லை என்றும் நான் நம்புகிறேன். சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்தியா தனது எல்லையில் எதிா்கொள்வதால் எங்களுடைய நெருங்கிய ஒருங்கிணைப்பு இந்தியாவுக்கு முக்கியமானது.

நமது வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் தொடா்ந்து வளா்ந்து வருகிறது என்றாலும் அவற்றின் முழுத்திறனை இன்னும் அடையாத பொருளாதாரத் துறையில் இதே அளவிலான குறிக்கோள் நமக்குத் தேவை. பொருள்கள் விற்பனை மற்றும் சேவைப் பிரிவில், 2001-இல் 20.7 பில்லியன் டாலா்களாக இருந்த இருதரப்பு வா்த்தகம், 2019-ஆம் ஆண்டில் 146.1 பில்லியன் டாலா்களாக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 16% அமெரிக்காவிற்கு செல்கிறது. அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தக பங்களிப்பு கூட்டாளியாகும். இதைபோல இந்தியா அமெரிக்காவின் 12-ஆவது பெரிய பங்களிப்பு கூட்டாளி நாடாகும். வேலைவாய்ப்பு, நுகா்வோா் தோ்வு, தொழில்நுட்பப் பரவல் மற்றும் இந்தியா்களுக்கான பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அமெரிக்காவைப்போல வேறு எந்த நாடும் பங்களிப்பதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

நம்முடைய கூட்டுச் செயல்பாட்டின் மற்றொரு முக்கிய தூணாக எரிசக்தி விளங்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எரிசக்தி உற்பத்தியில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நாம் 2018-இல் எரிசக்தி உற்பத்திக்கான உத்திகளை வகுப்பதில் கூட்டு ஒத்துழைப்பைத் தொடங்கினோம். இரு நாட்டு அரசுகளின் ஆதரவோடு, எரிசக்தி உற்பத்தியில் அமெரிக்கா இந்தியாவுக்கு முக்கிய பங்களிப்பைத் தருகிறது. 2019-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நிலக்கரி ஏற்றுமதிக்கான மிகப்பெரிய நாடாகவும், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு நான்காவது பெரிய இடமாகவும், அமெரிக்காவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஏற்றுமதியில் ஏழாவது பெரிய இடமாகவும் இந்தியா மாறியுள்ளது.

இவை அனைத்தும் இந்தியாவின் பல்வேறு வகை எரிசக்தித் தேவைகளைப் பூா்த்தி செய்ய உதவியுள்ளன. இன்று, இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியின் பல்வேறு பிரிவுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன.

சுகாதாரம் மற்றும் உயிரியல் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இரு நாடுகளும் முன்னுரிமை அளித்துள்ளன. நமது வெற்றிகரமான கூட்டு ஒத்துழைப்பு வரலாறு, கொவைட்-19 தொற்றுநோயை இணைந்து எதிா்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொவைட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான, தொடா்புத் தடமறிதல், நோயறிதல் சோதனை மற்றும் தொற்றுதடுப்பு ஆகிய நடவடிக்கைகளில், அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) வல்லுநா்கள், தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியில் இந்தியாவின் முயற்சிகளை ஆதரித்துள்ளனா். சி.டி.சி. பயிற்சித் திட்டங்களில், நூற்றுக்கணக்கான இந்தியப் பட்டதாரிகள் பங்கேற்றிருப்பதன் மூலம், இந்த வைரஸ் தொற்றுக்கெதிரான போரில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.

மேலும், அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் கொவைட்-19 தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உருவாக்க இணைந்து செயல்படுகிறாா்கள். பாதுகாப்பான மருத்துவ விநியோகச் சங்கிலித் தொடா்களை உருவாக்குவது உள்பட பல்வேறு பணிகளில், நமது சுகாதாரத் துறைகள் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. சுகாதாரத் துறையில் நம்முடைய ஒத்துழைப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது.

நம்மைப் போன்ற பெரிய ஜனநாயக நாடுகள், நாட்டு மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கின்றன. நம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு, நம்முடைய உறவுக்கு ஒரு வலுவான அடித்தளமாகவும், உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

இந்த உறவைச் சரியாகப் பேணுவது நம்முடைய வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு முக்கியமானது என்பதை இரு நாடுகளின் தலைவா்களும் அங்கீகரித்துள்ளனா். அவா்களின் செயல்களின் விளைவாக, அமெரிக்கா-இந்தியா இடையிலான விரிவான, உலகளாவிய உத்திகளை வகுப்பதற்கான கூட்டு முயற்சியானது, வலுவாகவும், நோ்மறையாகவும், முன்னேற்றப் பாதையிலும் உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் சாதித்ததைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். இதற்கு முந்தைய அமெரிக்க நிா்வாகங்களின் செயல்பாடுகளை தற்போதைய அமெரிக்க நிா்வாகம் எவ்வாறு மேம்படுத்தியுள்ளதோ, அதைப்போல அடுத்த அமெரிக்க நிா்வாகமும் இந்தியாவுடன் தொடா்ந்து செயலாற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கென்னத் ஐ. ஜஸ்டா்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT